நள்ளிரவில் இடி விழுந்ததில் 5 ஏக்கர் கரும்பு தீயில் கருகி நாசம்!!
Author: kavin kumar12 August 2021, 1:54 pm
விழுப்புரம்: கண்டாச்சிபுரம் அருகே நள்ளிரவில் இடி விழுந்ததில் 5 ஏக்கர் கரும்பு தீயில் கருகி நாசம் அடைந்தது.
விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் மற்றும் அதன் சுற்று வட்டார கிராமங்களில் நேற்று இரவு முதல் இடியுடன் கூடிய மித மழை பெய்தது. இந்நிலையில், கண்டாச்சிபுரம் அருகே உள்ள காரணை பெரிச்சானூர் கிராமத்தில் பாலு என்பவருக்கு சொந்தமான நிலத்தில் சுமார் 12 ஏக்கர் பரப்பளவில் கரும்பு பயிரிடப்பட்டுள்ளது. இந்த கரும்பு பயிரில், நேற்று நள்ளிரவு இடி விழுந்துள்ளது. இதன் காரணமாக, கரும்பு தோட்டத்தில் தீ பிடிக்கவே, நிலத்தின் உரிமையாளரும் பொதுமக்களும் செய்வதறியாது திகைத்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, வேட்டவலம் மற்றும் திருக்கோவிலூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டு; 2 தீயணைப்பு வாகனங்களும் சம்பவ இடத்திற்கு வந்து அப்பகுதி இளைஞர்களின் உதவியோடு தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். விரைவாக செயல்பட்டு 3 மணி நேரத்திற்குள் தீயை அணைத்ததால் 12 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த கரும்பில், ஐந்து ஏக்கர் மட்டுமே சேதமடைந்தது. மேலும், மிதமான மழை பெய்ததன் காரணமாகவும் தீ பரவாமல் இருந்தது. தீயில் கருகிய கரும்பின் மதிப்பு தோராயமாக ரூபாய் 5 லட்சம் இருக்குமென கூறப்படுகிறது.
0
0