தீபாவளி நாட்களில் குற்ற நடவடிக்கை தடுக்கும் வகையில் 6 தனிப்படை அமைப்பு: மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பேட்டி…

Author: kavin kumar
2 November 2021, 7:09 pm
Quick Share

திருச்சி: தீபாவளி நாட்களில் குற்ற நடவடிக்கை தடுக்கும் வகையில் 6 தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளதாக திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.

திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மூர்த்தி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:- தலை தீபாவளியைக் கொண்டாடும் தொண்ணூற்று ஒன்பது காவலர்கள் மகிழ்ந்து கொண்டாடும் வகையில் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. தீபாவளி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரவுடிகளின் நடவடிக்கைகளை கண்காணிக்க ரவுடிகளை பிடிக்கும் 6 சிறப்பு தனிப்படைகள் செயல்பட்டு வருகின்றன. சட்டவிரோத சில்லறை மது விற்பனை, சட்டவிரோத பட்டாசு விற்பனை ஆகியவற்றை தடுக்கும் வகையில் 5 சிறப்பு குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அதிகமாக மக்கள் கூடும் இடங்களில் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தபோதுமான காவல் ஆளிநர்கள் நியமிக்கப்பட்டும், பேருந்து கூட்ட நெரிசல் ஏற்படாமலிருக்க க்யு (Queue System) வரிசை முறையும் செயல்படுத்தப்பட்டுள்ளது.

தீபாவளி பண்டிகையை பொதுமக்கள் தகுந்த பாதுகாப்புடன் கொண்டாடவேண்டி, ஒரு முன்னெச்சரிக்கை பாதுகாப்பு திட்டம் ஏற்படுத்தப்பட்டு,கடந்த 01.11.2021-ஆம் தேதி முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதில் 50 அலுவலர்கள், 250 காவலர்களும் ஆக மொத்தம் 300 காவல் ஆளிநர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். திருச்சி மாவட்ட காவல்துறையினர் மிகச்சிறப்பாக செயல்பட்டு 2021-ஆம் ஆண்டு ஜனவரி முதல் 31.10.2021-ஆம் தேதி வரை 2 கோடியே
92லட்சம் மதிப்புள்ள திருட்டு வழக்குச் சொத்துகளை மீட்டுள்ளனர். ரவுடிகள் மீது உரிய நடவடிக்கை எடுத்து சட்டம் ஒழுங்கை நிலைநாட்டும் நோக்கில், இதுவரை 40 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் 52 ரவுடிகள் பல்வேறு வழக்குகளில் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். தவிரவும் 121 ரவுடிகள் மீது 110 விதியின் கீழ் நடவடிக்கை மேற்கொண்டு நன்னடத்தை பிணையப் பத்திரம் பெறப்பட்டுள்ளது.

இந்த ஆண்டில் 31.10.2021-ஆம் தேதி வரை 5,78,490 வாகன வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இதுவரை ரூ. 31/2 கோடி தண்டத்தொகை பெறப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இதே நாளில் 4,06,438 வழக்குகள் மட்டுமே பதிவு செய்யப்பட்டு ரூ.2,43,89,600/- தண்டத்தொகை வசூலிக்கப்பட்டுள்ளது என்பதும், இந்த ஆண்டு போக்குவரத்து விதிமுறை மீறல்கள் குறித்து 1,72,052 வழக்குகள் கூடுதலாக பதிவுசெய்யப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டில் 3 கொலை வழக்குகளில் சம்மந்தப்பட்ட எதிரிகளுக்கு ஆயுள் தண்டனை பெற்று தரப்பட்டுள்ளது.மகளிர், குழந்தைகள் ஆகியோரை காக்க மாவட்டத்தில் கடந்த ஜீன் மாதம் 15 காவல் நிலையங்களில் “Women Help Desk” துவங்கப்பட்டு அவை மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன.குற்றத்தடுப்பு நடவடிக்கையாக புதிதாக Revamped Rounds System (6 rounds) அறிமுகப்படுத்தப்பட்டு குற்ற தடுப்பு நடவடிக்கைகள் நடைபெறுகின்றன. மேலும் திருச்சி மாவட்டத்தில், 36 தகவல் மையம் மூலம் ரோந்து (BeatSystem) அறிமுகப்படுத்தப்பட்டு, காவலர்கள் (Beat Officers) சுழற்சி முறையில் பணியாற்றி வருகின்றனர்.

மாவட்ட ஆயுதப்படையில் காவலர்களின் நலனுக்காக காவலர் மருத்துவமனை, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், மூலிகை தோட்டம் ஆகியவை ஏற்படுத்தப்பபட்டுள்ளன என தெரிவித்தார். மேலும், “உங்கள் துறையில் முதல்வர்” திட்டதின்கீழ் 30.09.2021 அன்று நடைபெற்ற காவலர்கள் குறைதீர்க்கும் முகாம் நடத்தப்பட்டு, அதில் 167 மனுக்கள் பெறப்பட்டு அனைத்து மனுக்களும் உரிய காலத்தில் தீர்வுகள் காணப்பட்டுள்ளன. மாவட்டத்தில் சாலையோரத்தில் மனநலம் குன்றி ஆதரவற்று சுற்றி திரிந்தவர்களைக் கண்டுபிடித்து, அவர்களைச் சுத்தம் செய்து, அவர்களுக்கு புத்தாடைகள் வழங்கி, அவர்களின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படுகிறது. உறவினர் இல்லாதவர்கள் ஆதரவற்றோர் இல்லங்களில் சேர்க்கப்படுகின்றனர்.

Views: - 208

0

0