விவசாயி வீட்டில் 6 பவுன் தங்க நகை ரூ 50 ஆயிரம் ரொக்கப் பணம் திருட்டு: கைரேகை நிபுணர்களை கொண்டு போலீசார் விசாரணை

Author: Udayaraman
9 October 2020, 7:55 pm
Quick Share

திருவாரூர்: வேலங்குடி கிராமத்தில் விவசாயி வீட்டின் பூட்டை உடைத்து 6 பவுன் தங்க நகை மற்றும் 50 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

திருவாரூர் அருகே வேலங்குடியைச் சேர்ந்தவர் சேகர். இவர் திருச்சி பெல் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். தற்போது தனது வீட்டின் அருகாமையிலேயே உள்ள தனது விவசாய நிலத்தில் விவசாய பணிகளை கவனித்து வருகிறார். இந்நிலையில் தனது வீட்டின் பின்புறம் வீட்டின் கட்டுமானப் பணியை தற்போது மேற்கொண்டு வருகிறார். இதன் காரணமாக வேலங்குடியில் உள்ள தனது வீட்டை பூட்டிவிட்டு தற்காலிகமாக கூட்டுறவு நகரில் வசித்து வருகிறார். கட்டுமான வேலை நடப்பதால் அவ்வப்போது வீட்டுக்கு வந்து செல்வார். இந்த நிலையில் நேற்று முன்தினம் வேலங்குடி வீட்டுக்கு வந்துவிட்டு பூட்டிவிட்டு சென்றார்.

இன்று வீட்டுக்கு வரும் போது வீட்டின் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதுகுறித்து திருவாரூர் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்து போலீசார் முன்னிலையில் வீட்டுக்குள் சென்று பார்த்தார். அப்போது வீட்டின் பீரோவில் இருந்த 6 பவுன் தங்க நகை மற்றும் 50 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து சேகர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். சம்பவ இடத்தில் தடயவியல் சோதனை மற்றும் மோப்ப நாய் சோதனை நடத்தப்பட்டது.

Views: - 31

0

0