15 வயது முதல் 46 வயதுக்கு வயத்துட்பட்டவர்கள் தான் 70% சாலை விபத்தில் உயிரிழப்பு: அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேச்சு

10 November 2020, 11:12 pm
Quick Share

கரூர்: 15 வயது முதல் 46 வயதுக்கு வயத்துட்பட்டவர்கள் தான் 70% சாலை விபத்தில் உயிரிழப்பதாக கரூரில் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணிபுரியும் மகளிருக்கு இரு சக்கர வாகனங்கள் வழங்கும் விழா, ஊரகப் புத்தாக்க திட்டத்தின் கீழ் கொரனோ சிறப்பு நிதியுதவி வழங்கும் விழா, புலம் பெயர்ந்து மீண்டுன் திரும்பிய திறன் பெற்ற இளைஞர்களுக்கான புதிய தொழில் முனைவோருக்கான துவக்க நிதி வழங்கும் விழா, மாற்று திறனாளிகளுக்கு மின் கலத்தினால் இயங்கும் மோட்டார் பொருந்திய சக்கர நாற்காலி வழங்கும் விழா மற்றும் 64வது தேசிய பள்ளி விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு உயரிய ஊக்கத்தொகை வழங்கும் விழா மாவட்ட ஆட்சியர் மலர்விழி தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிகளில் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்டங்களை வழங்கினார். இதில் 25 பயனாளிகளுக்கு சுமார் 25 லட்சம் மதிப்பீட்டில் மின் கலத்தினால் இயங்கும் மோட்டார் பொருத்திய சக்கர நாற்காலியும், புலம் பெயர்ந்து மீண்டும் திரும்பிய திறன் பெற்ற இளைஞர்கள் 37 பேருக்கு தலா 1 லட்சம் வீதம் 37 லட்சமும், தேசிய அளவில் தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலம் பதக்கங்களை பெற்ற வீரர்கள், வீராங்கனைகளுக்கு 19 லட்சம் ஊக்கத் தொகையும், அம்மா இரு சக்கர வாகனம் 100 பயனாளிகளுக்கு 25 லட்சம் மதிப்பீட்டிலான இரு சக்கர வாகன மானியங்களை வழங்கினார்.

அப்போது பேசிய போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், அம்மா காலத்தில் கொண்டு வந்த திட்டங்கள் பெண்களுக்கு தான் அதிக திட்டங்களை கொண்டு வந்தார். கிராம பெண்கள் வாழ்வாதாரம் உயர ஆடுகள், கறவை மாடுகளை கொடுத்தார். பெண்களின் முன்னேற்றத்தால் தான் தமிழகம் முன்னேறியுள்ளது. அதற்கு வித்திட்டவர் அம்மா. குழந்தை தொட்டில் திட்டத்தை கொண்டு வந்து அன்னை தெரசாவால் பாராட்டப்பட்டவர் அம்மா. இன்னும் 2000 பேருக்கு இரு சக்கர வாகனம் பெற விண்ணப்பிக்கலாம். இதனை வேலைக்குச் செல்லும் பெண்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். பெண்கள் அனைவரும் தலை கவசம் அணிந்து வாகனங்களை ஓட்ட வேண்டும்.

நீதிமன்றம் பின்னால் அமர்ந்து செல்பவர்களும் தலைகவசம் அணிய வேண்டும் என உத்தரவிட்டிருக்கிறது. ஆனால் யாரும் அதை கடை பிடிப்பது இல்லை. சென்னையில் மட்டும் தான் 90 சதவீதம் தலைகவசம் அணிய ஆரம்பித்துள்ளனர். முன்பு எல்லாம் சாலை விபத்தில் ஒருவர் இறந்து விட்டாலே பல மாசம் பேசுவோம், தற்போது 10 பேர் இறந்தாலும் அவற்றை சில நிமிடங்களில் மறந்து விட்டு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. சாலை விபத்துக்கள் அதிகளவில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

சாலைகள் அனைத்தும் தேசிய சாலைகளுக்கு இணையாக கிராம சாலைகள் போடப்படுள்ளன. வாகனங்களும் பெருகி விட்டதால் விபத்துகள் ஏற்படுகிறது. 15 வயது முதல் 46 வயதுக்கு வயத்துட்பட்டவர்கள் தான் 70% சாலை விபத்தில் உயிரிழக்கின்றனர். பெண்கள் தலைகவசம் அணிந்தால் அலங்காரம் கலைந்து விடும் என்கின்ற மனநிலையை மாற்ற வேண்டும் என்றார்.

Views: - 24

0

0