கணவன் இறந்த துக்கம் தாங்காமல் மனைவி உயிரிழப்பு: அடுத்தடுத்து தம்பதியினர் உயிரிழந்ததால் சோகத்தில் முழ்கிய கிராமம்

11 September 2020, 8:36 pm
Quick Share

அரியலூர்; ஜெயங்கொண்டம் அருகே கணவன் இறந்த துக்கம் தாங்காமல் மனைவி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள காசான்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர்கள் சேதுமணியன்(94), கமலம்(88), தம்பதியினர். கடந்த 75 வருடங்களுக்கு முன்னர் திருமணம் நடைபெற்று இவர்களுக்கு 6 மகள்கள் உள்ளனர். இதனிடையே காசான்கோட்டை கிராமத்தில் பெரிய நிலக்கிழாரான சேதுமணியன் வயது மூப்பின் காரணமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழந்தார். இதனால் சேதுமணியின் குடும்பத்தினர் உள்ளிட்ட அவரது உறவினர்கள் பெரும் துயரத்தில் இருந்தனர். இந்நிலையில் மாலை நடைபெற்ற இறுதி சடங்கின் போது சேதுமணியனை அடக்கம் செய்வதற்காக அவரது குடும்பத்தார் உள்ளிட்ட உறவினர்கள் இந்து வழக்கப்படி சடங்குகள் செய்து கொண்டிருந்தனர்.

அப்போது சேதுமணியனின் சடலத்தின் மீது கோடித்துணி போர்த்தியதை கண்டு கதறி அழுது கொண்டிருந்த அவரின் மனைவி கமலம் திடீரென்று மயங்கி கீழே விழுந்து உயிரிழந்தார். இதனையடுத்து மூதாட்டி கமலத்தின் உடலும் இறுதி சடங்கிற்கு பிறகு இடுகாட்டிற்கு எடுத்து செல்லப்பட்டு தம்பதியினரின் சடலங்கள் அருகருகே அடக்கம் செய்யப்பட்டது. 75 ஆண்டுகளுக்கும் மேலாக தன்னுடன் குடும்பம் நடத்தி வந்த கணவர் இறந்த துக்கம் தாங்காமல் அவரது மனைவியும் அடுத்த சில மணி நேரங்களிலேயே மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவத்தால் காசான்கோட்டை கிராமமே பெரும் சோகத்தில் மூழ்கியுள்ளது.

Views: - 6

0

0