75வது சுதந்திர தின விழா: தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்திய ஆட்சியர்

Author: Udhayakumar Raman
15 August 2021, 1:29 pm
Quick Share

தஞ்சாவூர்: 75வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு தஞ்சாவூர் ஆயுதப்படை மைதானத்தில் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

இந்திய திருநாட்டின் 75வது சுதந்திர தினம் நாடு முழுவதும் இன்று உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தஞ்சாவூர் ஆயுதப்படை மைதானத்தில் தேசியக் கொடியை ஏற்றி வைத்த மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். நிகழ்ச்சியில் உலக சமாதானத்தை வலியுறுத்தும் விதமாக சமாதானப் புறாக்களும் மூவர்ண பலூன்கள் பறக்க விடப்பட்டன, சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு பட்டு துண்டுகள் அணிவித்து மாவட்ட ஆட்சித் தலைவர் மரியாதை செலுத்தினார்.

பின்னர் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, வேளாண்மைத் துறை, பொதுப்பணித்துறை, சமூக நலத்துறை, தமிழ்நாடு சுகாதாரத் திட்டம், கால்நடை பராமரிப்பு துறை உள்ளிட்ட துறைகளிலும் ,கொரோனா தடுப்பு பணிகள் சிறப்பாக பணி புரிந்த பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை, தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரியில் சிறப்பாக பணியாற்றியவர்கள், இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை, பள்ளிக்கல்வித்துறை ஆகிய துறைகளில் பணியாற்றியவர்களுக்கு நற்சான்றிதழ் மாவட்ட ஆட்சித் தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வழங்கினார்.

இந்த வருடம் 209 நபர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.கொரோனா பரவலை கருத்தில்கொண்டு சுதந்திர தின விழா எளிமையான முறையில் நடைபெற்றது. வழக்கமாக நடைபெறும் அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி இந்த ஆண்டு நடைபெறவில்லை, மேலும் பள்ளி குழந்தைகளின் கலைநிகழ்ச்சிகளும் நடத்தப்படவில்லை. சுதந்திர தின விழா கொண்டாட்டத்தில் தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரவளி பிரியா தஞ்சை சரக காவல்துறை துணைத் தலைவர் ப்ரேவேஸ் குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Views: - 104

0

0