இருசக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் 10 வயது சிறுமி பலி.!

Author: Udayaraman
10 October 2020, 8:03 pm
Quick Share

காஞ்சிபுரம்: ஸ்ரீபெரும்புதூர் அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் 10 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் பகுதியை சேர்ந்தவர் சதீஷ். இவரது மகள் மோனிகா(10). மோனிகாவும் இவரது மாமா சந்திரசேகரும் இருசக்கர வாகனத்தில் அரக்கோணத்தில் இருந்து திருவள்ளூர்- ஸ்ரீபெரும்புதூர் சாலையில் திருவள்ளூர் நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது செங்காடு அருகே வந்தபோது சந்திரசேகருக்கு தொலைபேசியில் அழைப்பு வரவே இருசக்கர வாகனத்தை சாலையோரமாக நிறுத்திவிட்டு ஃபோனில் பேசிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

அந்த சமயத்தில் திருவள்ளூரில் இருந்து ஸ்ரீபெரும்புதூர் நோக்கி எதிர்திசையில் வந்த கண்டெய்னர் லாரி இருசக்கர வாகனம் மீது மோதிவட்டு நிற்காமல் சென்றது. இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த மோனிகா லாரியின் பின் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார் மேலும் சிறுமியுடன் வந்த சந்திரசேகர் சிறிய காயங்களுடன் உயிர் தப்பினார்.

இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற லாரி ஓட்டுனரை மடக்கிப்பிடித்து ஸ்ரீபெரும்புதூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின்பேரில் விபத்து நேர்ந்த இடத்திற்கு வந்த போலீசார் மோனிகாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த லாரி ஓட்டுனரை பிடித்து விபத்து குறித்து வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.

Views: - 33

0

0