மேய்ச்சலுக்குச் சென்ற ஆட்டைத் தேடி வந்த வாலிபர் கிணற்றில் தவறி விழுந்து பலி: பல மணி நேர தேடுதலுக்கு பின்பு சடலம் மீட்பு

17 June 2021, 5:54 pm
Quick Share

விருதுநகர்: சாத்தூர் அருகே மேய்ச்சலுக்குச் சென்ற ஆட்டைத் தேடி வந்த வாலிபர் கிணற்றில் தவறி விழுந்து பலியானார். சாத்தூர் தீயணைப்புத் துறையினர் பல மணி நேர தேடுதலுக்கு பின்பு சடலமாக மீட்டனர்.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள பூசாரி நாயக்கன் பட்டியைச் சேர்ந்த புள்ளமா நாயக்கர் என்பவர் மகன் வெள்ளைச்சாமி வயது 22. இவர் ஆடு மேய்க்கும் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று ஆடுகளை மேய்ச்சலுக்கு சென்று வீடு திரும்பிய போது தனது ஆட்டு மந்தையில் ஒரு ஆடு காணாமல் போனது தெரியவந்தது. இதனால் காணாமல் போன ஆட்டை அருகிலுள்ள கிராமங்களில் தேடி அலைந்துள்ளார். அதே போல் சாத்தூர் அருகே உள்ள ரெங்கப்ப நாயக்கன்பட்டி பகுதியில் தனது நண்பரான சல்வார் பட்டியை சேர்ந்த இசக்கிராஜ் (19) என்பவருடன் சேர்ந்து தேடி அலைந்து உள்ளனர்.

இந்நிலையில் இரவு நேரம் என்பதால் ஊரின் அருகில் இருந்த கிணற்றில் வெள்ளைச்சாமி தெரியாமல் தவறி விழுந்துள்ளார். வெள்ளைச்சாமி கிணற்றில் விழுந்தவுடன் இசக்கிராஜ் செய்வதறியாது திகைத்து நின்றவர் பின்னர் சாத்தூர் தீயணைப்பு துறையினருக்கும், சாத்தூர் காவல் நிலையத்திற்கும் தகவல் அளித்துள்ளார். தகவலறிந்து விரைந்து வந்த சாத்தூர் தீயணைப்புத் துறையினர் தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் பாழடைந்த கிணறு என்பதால் தண்ணீரில் குப்பையும் செடிகளும் அதிகம் இருந்ததால் இரவு நேரம் என்பதால் அருகில் மின்வசதி இல்லாததால் இறங்கி தேட முடியாத சூழ்நிலையில் தேடுதல் பணியில் தொய்வு ஏற்பட்டது.

பின்னர் மின் மோட்டார் வைத்து நீரை வெளியேற்றி பல மணி நேர தேடுதலுக்கு பின் சாத்தூர் தீயணைப்பு நிலைய அலுவலர் கதிரேசன் தலமையிலான தீயணைப்பு மீட்பு பணி வீரர்கள் வெள்ளைச்சாமி உடலை சடலமாக மீட்டு மேலே கொண்டு வந்தனர். சாத்தூர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து வெள்ளைச்சாமி உடலை கைப்பற்றி சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Views: - 108

0

0