பிரதமரின் விவசாயிகள் நிதி உதவி திட்டத்தில் முறைகேடு: மேலும் ஒரு இளைஞர் கைது…

17 September 2020, 9:24 pm
Quick Share

செங்கல்பட்டு: பிரதமரின் விவசாயிகள் நிதி உதவி திட்டத்தில் முறைகேடு செய்ததாக உளுந்தூர்பேட்டை பகுதியில் மேலும் ஒரு இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

பிரதமரின் விவசாயிகள் நிதி உதவித் திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் 3 தவணைகளாக தலா ரூ.2000 வீதம் ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. இத்தொகை விவசாயிகளின் வங்கிக் கணக்குகளுக்கே நேரடியாக வரவு வைக்கப்பட்டு வந்தது. இத்திட்டத்தில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 2812 பேருக்கு ரூ.78 லட்சம் முறைகேடாக அனுப்பப்பட்டது கண்டறியப்பட்டது. இதில் ரூ.59 லட்சம் சம்பந்தப்பட்டவா்களிடமிருந்து வசூல் செய்யப்பட்டு விட்டது. மீதமுள்ள ரூ.19 லட்சம் அவரவா்களின் வங்கிக் கணக்கிலிருந்து அரசுக் கணக்குக்கு பணப் பரிமாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

பறிமுதல் செய்யப்பட்ட மொத்த தொகையும் பிரதமரின் விவசாயிகள் நிதி உதவித்திட்ட வங்கிக் கணக்குக்கு உடனடியாக அனுப்பி வைக்கப்படும் என காஞ்சிபும் மாவட்ட ஆட்சியர் பொன்னையா நேற்று முன்தினம் தெரிவித்தார்.
இந்நிலையில் இரண்டு தினம் முன்பு விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை கிளியனூர் பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்கின்ற 26 வயதுடைய இளைஞனை சிபிசிஐடி காஞ்சிபுரம் அழைத்து வந்து மூன்று நாள் முழுவதும் விசாரணை செய்தனர் .

இறுதியில் இவர் உளுந்தூர்பேட்டை பகுதியில் பிஎஸ்சி கம்ப்யூட்டர் சென்டர் நடத்தி அதன் மூலமாக நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு போலியான ஆவணங்களை தயாரித்து அவர்கள் பெயரில் கிசான் திட்டத்தில் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. இதனையடுத்து மணிகண்டனை சிபிசிஐடி போலீசார் கைது செய்து செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அதனை விசாரித்த நீதிபதி காயத்ரிதேவி மணிகண்டனை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு பிறப்பித்தார். இதனையடுத்து அவர் நீதிமன்றத்தில் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

மேலும் காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள ஒன்றிய அளவில் உள்ள வேளாண் துறை சம்பந்தப்பட்ட ஊழியர்களை சிபிசிஐடி போலீசார் தொடர்ச்சியாக விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.