ஆக்சிசன் தொழிற்சாலைகளை செயல்படுத்துவதற்கான நடவடிக்கை: அமைச்சர் தங்கம் தென்னரசு பேட்டி

17 May 2021, 7:52 pm
Quick Share

தூத்துக்குடி: தமிழகத்தில் செயல்படாமல் உள்ள ஆக்சிசன் தொழிற்சாலைகளை செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தூத்துக்குடியில் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பேட்டி.

தென் மாவட்ட மருத்துவ மனைகளில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு தேவையான ஆக்ஸிஜன் ஒடிசாவில் இருந்து ரயில் மூலம் தூத்துக்குடி கொண்டு வரப்பட்டது. ஒரிசாவில் இருந்து 78.82 மெட்ரிக் டன் ஆக்சிஜனை ஏற்றிக்கொண்டு அந்த ரயில் தூத்துக்குடி மீளவிட்டான் ரயில் நிலையம் வந்தடைந்தது. ஒடிசா மாநிலம் ரூர்க்கெல்லா செயில் இரும்பு உருக்கு ஆலையிலிருந்து 78.82 மெட்ரிக் டன் ஆக்சிஜனை ஏற்றி கொண்டு புறப்பட்ட இந்த ரயில் தூத்துக்குடி மீளவிட்டான் ரயில்நிலையம் வந்தடைந்தது.  இந்த திரவ ஆக்சிஜன் தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி, மதுரை, சிவகங்கை, தேனி ஆகிய 7 மாவட்டங்களில் உள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

திரவ ஆக்சிஜன் டேங்கர் லாரிகளை தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம்தென்னரசு, தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதாஜீவன், தமிழக மீன் வளம்,மீனவர் நலம் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழி, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் ஆகியோர் பார்வையிட்டு அனுப்பி வைத்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பேசுகையில், தமிழகத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்படாதவாறு தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார். தமிழகத்தில் செயல்படாமல் உள்ள ஆக்சிசன் தொழிற்சாலைகளை செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

புதிதாக ஆக்சிசன் உற்பத்தி ஆலைகள் தொடங்குவதற்கான எளிதாக்கப்பட்ட புதிய தொழில் வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிடப்பட்டுள்ளது என்று கூறினார். திருச்சி பாரத மிகு மின்  நிறுவனத்தில் கரூரில் உள்ள தமிழ்நாடு பேப்பர் நிறுவனத்திலும் ஆக்ஸிஜன் தயாரிப்புக்கான ஆய்வுகளை தமிழக அமைச்சர்கள் மேற்கொண்டுள்ளதாக கூறிய அவர்,
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஏற்பட்ட பழுது சரி செய்யப்பட்டுள்ளது. இன்னும் இரண்டு தினங்களில் ஆக்சிஜன் ஸ்டெர்லைட் ஆலை இருந்து கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது என்றும் அவர் கூறினார்.

Views: - 45

0

0