அனைத்து சுற்றுலா வாகன சங்கத்தினர் மற்றும் ஓட்டுநர்கள் தர்ணா போராட்டம்

24 September 2020, 7:26 pm
Quick Share

புதுச்சேரி: கொரோனா ஊரடங்கு காலத்திற்கான சுற்றுலா வாகனத்திற்கான சாலை வரியை ரத்து செய்ய வலியுறுத்தி அனைத்து சுற்றுலா வாகன சங்கத்தினர் மற்றும் ஒட்டுநர்கள் புதுச்சேரி மத்திய சாலை போக்குவரத்து அலுவலகம் வாயில் கேட்டை பூட்டி தர்ணா போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

புதுச்சேரியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தனியார் சுற்றுலா வாகனங்கள் இயக்கப்படுகின்றன. இந்நிலையில்
கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 5 மாதங்களாக சுற்றுலா வாகனங்கள் இயக்கப்படவில்லை. ஆனால் சாலை வரி உள்ளிட்ட போக்குவரத்து வரிகளை கட்ட வேண்டும் என புதுச்சேரி அரசு போக்குவரத்து துறை அறிவித்திருந்தது. ஆனால் வருமானம் இல்லாமல் சுற்றுலா வாகன உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுனர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் சாலை வரி உள்ளிட்ட வரிகளை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என சுற்றுலா வாகன உரிமையாளர்கள் பலகட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வந்த நிலையில், வரியை தள்ளுபடி செய்ய கோரி பலமுறை மனு அளித்தும்,

இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று சுற்றுலா வாகன உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் அரசு போக்குவரத்து துறை அலுவலக ஆணையரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால் உரிய முடிவு எட்டப்படாததால் அனைவரும் போக்குவரத்து துறை வாயில் கேட்டை இழுத்து மூடி தர்ணாவில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் போக்குவரத்து வரிகள் அனைத்தையும் ரத்து செய்ய வேண்டும் என கோஷங்களை எழுப்பினர். இதனை தொடர்ந்து அதிகாரிகள் வந்து பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற சுற்றுலா வாகன உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்களின் போராட்டம் காரணமாக ஆர்.டி.ஓ அலுவலகத்திற்கு வந்த பொதுமக்கள் வெளியே செல்ல முடியாமல் தவித்தனர்.

Views: - 1

0

0