எலக்ட்ரீசியன் தூக்கிட்டு தற்கொலை

16 November 2020, 8:37 pm
Quick Share

அரியலூர்: ஜெயங்கொண்டம் அருகே எலக்ட்ரீசியன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அருகேயுள்ள கரியமாணிக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வம். இவருக்கு கௌரி என்ற மனைவியும் 2 மகன்களும் உள்ளனர். இவர் குடும்பத்தை விட்டு பிரிந்து கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே கரடிகுளத்தில் ஆஸ்பெஸ்டா ஷீட் போட்ட கொட்டகையை வாடகைக்கு எடுத்து அதிலேயே தங்கிக்கொண்டு கார், டிராக்டர் போன்ற கனரக வாகனங்களுக்கு வயரிங் (எலக்ட்ரீசியன்) வேலை பார்த்து வந்தார்.

இந்நிலையில் கடந்த 4 நாட்களாகவே செல்வம் தங்கியிருந்த கொட்டகை உள்பக்கம் தாழ்ப்பால் போட்ட நிலையிலேயே இருந்துள்ளது. திடீரென இன்று கொட்டகையில் இருந்து துர்நாற்றம் வீசியுள்ளது. அக்கம்பக்கத்தில் குடியிருப்பவர்கள் சென்று கதவை தட்டி பார்த்தபோது கதவு உள்பக்கமாக தாழ்ப்பால் போட்டிருந்ததால் சுவற்றின் ஓட்டை வழியாக பார்த்தபோது செல்வம் உடல் அழுகிய நிலையில் நைலான் கயிற்றால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

இதனை தொடர்ந்து ஜெயங்கொண்டம் போலீசாருக்கு தகவல் கொடுத்ததையடுத்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் குறிஞ்சிப்பாடியில் உள்ள செல்வத்தின் மகன்களுக்கு தகவல் கொடுத்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Views: - 20

0

0