ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு கோவில் கட்டிய எம்எல்ஏ: அரசின் நலத்திட்டங்களை விளக்கும் சித்தரிப்பு..!!

Author: Aarthi Sivakumar
19 August 2021, 6:41 pm
Quick Share

ஆந்திரப்பிரதேசம்: ஒய்எஸ்ஆர் கட்சித் தலைவரும், முதலமைச்சருமான ஒய்.எஸ்.ஜெகன் மோகன் ரெட்டிக்கு அக்கட்சியை சேர்ந்த எம்எல்ஏ மதுசூதன ரெட்டி ஒரு கோயிலைக் கட்டி அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளார்.

ஆந்திரப் பிரதேசத்தில் ஒய்எஸ்ஆர் கட்சித் தலைவரும், முதலமைச்சருமான ஒய்.எஸ்.ஜெகன் மோகன் ரெட்டிக்கு அக்கட்சியை சேர்ந்த எம்எல்ஏ மதுசூதன ரெட்டி ஒரு கோயிலைக் கட்டியுள்ளார். சித்தூர் மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தியில் இந்த கோயில் கட்டப்பட்டுள்ளது.

இந்த கோவில் கட்டுமானத்தின் பின்னணியில் அரசாங்கத்தின் நலத்திட்டங்களை காட்சிப்படுத்தும் வகையில் சித்தரிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக எம்எல்ஏ மதுசூதனன் தனது ட்விட்டர் பதிவில் கூறும்போது, ஜெகன் மோகன் ரெட்டி நாட்டின் பல முதலமைச்சர்களை விட சிறப்பாக செயல்பட்டுள்ளார்.

ஏழை மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த ஜெகன்மோகன் ரெட்டியால் கொண்டு வரப்பட்டது நவரத்னலு திட்டம். அந்த திட்டம் குறித்து மக்களுக்கு எடுத்துரைக்கும் வகையில் இந்த கோயில் கட்டப்பட்டுள்ளது. நவரத்னலு திட்டம் மாநிலம் முழுவதும் 5.65 கோடி பயனாளிகளின் வாழ்க்கையை மாற்றி அமைத்துள்ளது. முதலமைச்சரின் தீவிர அபிமானியாக, அவரது நலன் சார்ந்த நடவடிக்கைகளை வெளிப்படுத்துவதே எனது முயற்சி என்று மதுசூதனன் தெரிவித்துள்ளார்.

இந்த கோவிலில் ஜெகன் மோகன் ரெட்டியின் உருவப் படங்கள் பொன் மற்றும் வெள்ளி கட்டமைப்புகளில் பதிக்கப்பட்டுள்ளன. இந்த கோவிலில் ஒன்பது தூண்கள் உள்ளன, ஒவ்வொன்றும் முதல்வர் ஜெகன் மோகன் அறிமுகப்படுத்திய நலத்திட்டங்களை சித்தரிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. தமிழக மற்றும் கர்நாடகாவை சேர்ந்த கட்டட நிபுணர்கள் உதவியுடன் இந்த கோவில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

மதுசூதனின் இந்த செயலுக்கு ஒரு சிலர் பாராட்டு தெரிவித்தாலும், மக்களின் வரி பணத்தை வீணாக செலவழித்துள்ளதாக பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

Views: - 182

0

0