தீயணைப்பு நிலையத்தில் லஞ்ச ஒழிப்பு துறையினர் திடீர் சோதனை: கணக்கில் வராத 43 ஆயிரத்து 950 ரூபாய் பறிமுதல்

Author: kavin kumar
30 October 2021, 6:31 pm
Quick Share

தருமபுரி: தருமபுரி தீயணைப்பு நிலையத்தில் லஞ்ச ஒழிப்பு துறையினர் நடத்தய சோதனையில், பட்டாசு கடை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கட்டாய வசூல் செய்த கணக்கில் வராத 43 ஆயிரத்து 950 ரூபாய் பறிமுதல் செய்து, 3 தீயணைப்பு வீரர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தருமபுரி தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையத்தில் நிலை அலுவலர், சிறப்பு நிலைய அலுவலர் மற்றும் தீயணைப்பு வீரர்கள் என 22 பேர் பணியாற்றி வருகின்றனர். இந்த தீயணைப்பு நிலையத்தில் ஆண்டுதோறும், ஆயுத பூஜை, தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட பண்டிகை நாட்களில், தீயணைப்பு சான்று பெறும் பட்டாசு கடை, பெட்ரோல் பங்குகள், வெடிபொருள் குடோன், தொழிற்சாலைகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பணம் வசூல் செய்து பிரித்து வருகின்றனர். இதற்காக ஆண்டுதோறும் பணம் வசூல் செய்வதற்கான ஏலம் விடப்பட்டு, இருவர் வசூல் செய்து நிலையத்திலுள்ள அனைவருக்கும் பிரித்துக் கொடுக்க வேண்டும். இந்நிலையில் இந்த ஆண்டிற்கான பணம் வசூல் செய்ய 3 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் ஏலத்தினை, நிலையத்தில் பணியாற்றும் முன்னணி தீயணைப்பு வீரர் சேகர் மற்றும் தரம் உயர்த்தப்பட்ட தீயணைப்பு வீரர் முத்துக்குமார் இருவரும் எடுத்துள்ளனர்.

இதைத்தொடர்ந்து கடந்த சில தினங்களாக சேகர், முத்துக்குமார் இருவரும் தருமபுரி பகுதியில் உள்ள பட்டாசு கடைகள், வெடிபொருள் பதுக்கி வைக்கும் குடோன், தொழிற்சாலைகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு சென்று தீபாவளி வசூல் செய்து வந்துள்ளனர். தொடர்ந்து பண்டிகை காலங்களில் தீயணைப்பு வீரர்கள் கட்டாய வசூல் செய்வது குறித்து தருமபுரி லஞ்ச ஒழிப்பு துறை காவலர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனை அடுத்து லஞ்ச ஒழிப்புத் துறை காவல் துணை கண்காணிப்பாளர் இமானுவேல்ஞானசேகர் தலைமையிலான 7 பேர் கொண்ட காவலர்கள் திடீரென, இன்று தருமபுரி தீயணைப்பு நிலையத்தில் சோதனை நடத்தினர். அப்போது தீபாவளிக்காக பல்வேறு இடங்களில் கட்டாய வசூல் செய்யப்பட்ட கணக்கில் வராத 43 ஆயிரத்து 950 ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டது.

இதனையடுத்து கட்டாய வசூல் நடத்தி வந்த சேகர் முத்துக்குமார் இருவரிடமும் லஞ்ச ஒழிப்பு துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தொடர்ந்து தீயணைப்பு நிலையத்தில் லஞ்ச ஒழிப்பு துறை நடத்தி வரும் திடீர் சோதனையால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.கடந்தாண்டு லஞ்ச பணம் வசூல் செய்ய 2 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வசூல் செய்ய விமல் என்கிற தீயணைப்பு வீரர் ஏலம் எடுத்து வசூல் செய்ததது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

Views: - 254

0

0