தமிழகத்தில் 16 மாவட்டங்களில் ஆப்தமித்ரா செயல்படும்: ரமேஷ் குமார் ஹுடா பேட்டி

23 January 2021, 6:31 pm
Quick Share

தூத்துக்குடி: பேரிடரின் போது மக்களை பாதுகாப்பதற்காக முதல் களப்பணியாளர்கள் உருவாக்கும் வகையில் ஆப்தமித்ரா என்ற மத்திய அரசு திட்டம் தமிழகத்தில் 16 மாவட்டங்களில் செயல்படுத்தப்பட உள்ளதாக தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் இணை செயலாளர் ரமேஷ் குமார் ஹுடா தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடியில் இன்று இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் டாக்டர் கே.செந்தில்ராஜ், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் உள்ளிட்ட அரசு அலுவலர்களுடன் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் இது குறித்து ஆலோசனை நடத்தினார். அப்போது  ஆப்தமித்ரா திட்டம் பற்றிய விளக்க கையேட்டை அவர் வெளியிட்டார். அதன் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், புயல் தொடர் மழை வெள்ளம் ஆகியவற்றின் போது பொதுமக்களை பாதுகாப்பதற்காக முதல்நிலை களப்பணியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளதாகவும்,

தீவிரமாக களப்பணியாற்றி மக்களை காப்பாற்றும் வகையில் இவர்கள் செயல்படுவார்கள். ஆப்தமித்ரா என்ற இந்த திட்டம் தமிழகத்தில் 12 கடலோர மாவட்டங்கள் உட்பட 16 மாவட்டங்களில் கொண்டுவரப்படவுள்ளது என்று அவர் கூறினார்.  ஒவ்வொரு மாவட்டத்திலும் 300 பேர் 500 பேர் என தமிழகத்தில் 5 ஆயிரம் தன்னார்வலர்களை இத்திட்டத்தில் இணைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதில் தேசிய மாணவர் படையினர் நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் மற்றும் நேரு யுவகேந்திரா தன்னார்வலர்கள் உள்ளிட்டவர்கள் சேர்க்கப்படுவார்கள் என்றார். அதன் பின்னர் அவர்களுக்கு சென்னை மற்றும் பிற இடங்களில் உரிய பயிற்சிகள் அளிக்கப்படும் என்றும் அவர் கூறினார். இந்த திட்டமானது அடுத்த மாதம் தொடங்கப்படும் என்றார்.

Views: - 0

0

0