அடியாட்களுடன் வந்து வீட்டை காலி செய்ய முயற்சி: கணவரின் அக்காக்களுடன் குடுமிபிடி சண்டை: புகார் ஏற்க மறுத்த போலீசார்

7 July 2021, 2:31 pm
Quick Share

வேலூர் மாவட்டம் காட்பாடி கஸ்தூரிபாய் தெருவை சேர்ந்தவர் சரஸ்வதி மற்றும் நாகலட்ஷுமி. இருவரும் கணவனை இழந்து அவரது வயது முதிர்ந்த அவர்களது அம்மா சரோஜாவுடன் வாழ்ந்து வந்துள்ளனர். இவரது தம்பி சரவணன் இவரது மனைவி மகேஸ்வரி இருபது வருடங்களுக்கு முன்பு கணவரை விட்டு பிரிந்து சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. தனியாக தனது அக்காக்களுடன் வாழ்ந்து வந்த சரவணன் போதைக்கு அடிமையாகி போதையில் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டு இறந்து போயுள்ளார். பின்னர் இவர்களது தாயார் இறக்கும் தருவாயில் தன்னை வயதான காலத்தில் கவனித்துக் கொண்ட கணவனை இழந்த தன்னுடைய இரண்டு மகள்களுக்கும் தன்னுடைய வீட்டை உயில் எழுதி வைத்துள்ளார்.

இந்நிலையில் சொத்தில் தனக்கு பங்கு வேண்டும் என்று இறந்த சரவணனின் மனைவி தகராறு செய்துள்ளார். இது குறித்த வழக்கு நீமன்றத்தில் நிலுவையில் உள்ளது. தற்போது தீர்ப்பு வரும் சூழலில் எங்கே தீர்ப்பு தனக்கு பாதகமாக வந்துவிடுமோ என்று பயந்த மகேஸ்வரி அடியாட்களுடன் வந்து சரஸ்வதியின் வீட்டை காலி செய்ய முயன்றுள்ளார். தன்னுடைய கணவர் தங்கியிருந்த அறையில் இருந்த பொருட்களை வெளியே எடுத்து வீசிவிட்டு சரஸ்வதி பயன்படுத்தி வந்த சமையல் அறையையும், காலி செய்து அதில் அவருடைய பொருட்களை அடியாட்களின் உதவியுடன் கொண்டு வந்து போட்டுள்ளார்.

இருபது வருடங்கள் தன்னுடைய தம்பியை விட்டு பிரிந்து சென்றுவிட்டு எங்கள் அம்மா எங்கள் பெயரில் உயில் எழுதியுள்ள சொத்தில் இன்று மட்டும் வந்து பங்கு கேட்பது எந்த விதத்தில் நியாயம் என்று சரஸ்வதி மற்றும் நாகலட்சுமியும் மகேஸ்வரியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இது குறித்து காட்பாடி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தபோது அவர்கள் புகாரினை ஏற்க மறுத்து நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், இதுகுறித்த புகாரினை ஏற்க முடியாதென்றும் கூறியுள்ளதால் இவர்களின் சண்டை தெருவுக்கு வந்து அடியாட்கள் தலையீட்டில் முடிந்துள்ளது. சொத்து குறித்த புகாரினை ஏற்க மறுத்தாலும் அடியாட்களை வைத்து அராஜகமாக உள்ளே நுழைந்ததற்காக சரஸ்வதி கொடுத்த புகாரையும் போலீசார் ஏற்க மறுத்தது வேடிக்கையாக உள்ளது.

Views: - 359

0

0