சுப நிகழ்ச்சிகளை மாநகராட்சியின் இணையதளத்தில் தெரிவிக்க வேண்டும்:மாநகராட்சி ஆணையர் அறிவிப்பு

Author: Udhayakumar Raman
31 August 2021, 8:14 pm
Quick Share

கோவை: கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில்‌ உள்ள ஹோட்டல்கள்‌, திருமண மண்டபங்கள்‌ மற்றும்‌ கோயில்கள்‌ ஆகியவற்றில்‌ பதிவு செய்யப்படும்‌ திருமணம்‌ போன்ற சுப நிகழ்ச்சிகள்‌ குறித்த விவரங்களை மாநகராட்சியின் இணையதள பக்கம் மூலம் தெரியப்படுத்த வேண்டும் என்று மாநகராட்சி ஆணையர் ராஜ கோபால்‌ சுன்கரா தெரிவித்துள்ளார்.

கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில்‌ உள்ள ஹோட்டல்கள்‌, திருமண மண்டபங்கள்‌ ஆகியவற்றின்‌ உரிமையாளர்களுடனான ஆலோசனைக்‌ கூட்டம்‌ மாநகராட்சி ஆணையர் ராஜ கோபால்‌ சுன்கரா தலைமையில்‌ நடைபெற்றது. மாநகராட்சி பிரதான அலுவலகக்‌ கூட்டரங்கில்‌ நடைபெற்ற இந்த ஆலோசனைக்‌ கூட்டத்தில்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ அவர்கள்‌ தெரிவித்ததாவது:- கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில்‌ உள்ள ஹோட்டல்கள்‌, திருமண மண்டபங்கள்‌ மற்றும்‌ கோயில்கள்‌ ஆகியவற்றில்‌ பதிவு செய்யப்படும்‌ திருமணம்‌ போன்ற சுப நிகழ்ச்சிகள்‌ குறித்த விவரங்களை மாநகராட்சிக்கு தெரியப்படுத்த வேண்டும்‌ என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்குறிப்பிட்ட விஷங்களை மாநகராட்சியின் https://covid.ccmc.gov.in/ccmc/bookingintimation என்ற இணையதளத்தில்‌ தெரியப்படுத்த வேண்டும்‌. ஹோட்டல்‌ உரிமையாளர்கள்‌, திருமண மண்டப உரிமையாளர்கள்‌ திருமணம்‌ நிகழ்ச்சிகள்‌ மற்றும்‌ இதர நிகழ்ச்சிகள்‌ குறித்த விபரங்களை ஒரு வாரத்திற்கு முன்பே சம்மந்தப்பட்ட வட்டாட்சியரிடம்‌ தெரிவித்து உரிய அனுமதி பெற வேண்டும்‌.
முன்‌ அனுமதியின்றி நடைபெறும்‌ திருமணம்‌ உள்ளிட்ட அனைத்து நிகழ்ச்சிகளுக்கும்‌ தொடர்புடைய திருமண மண்டபம்‌ மற்றும்‌ ஹோட்டல்‌ உரிமையாளர்‌ மீது நடவடிக்கை எடுக்கப்படும்‌. திருமண நிகழ்ச்சி மற்றும்‌ இதர நிகழ்ச்சிகளுக்கு 50 நபர்களுக்கு மிகாமல்‌ இருக்க வேண்டும்‌.

மேலும்‌, திருமண நிகழ்ச்சியில்‌ கலந்து கொள்பவர்களிடம்‌ அனைவரும்‌ முகக்கவசம்‌ கட்டாயம்‌ அணிய வேண்டும்‌. நுழைவு வாயிலில்‌ கிருமி நாசினி திரவம்‌ வைத்து அனைவரின்‌ கைகளையும்‌ சுத்தம்‌ செய்து அனுமதிக்க வேண்டும்‌. இதனை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம்‌ மண்டப உரிமையாளர்கள்‌ அறிவுறுத்த வேண்டும்‌. சுப நிகழ்ச்சிகள்‌ நடைபெறும்‌ பொழுது கலந்து கொள்பவர்கள்‌ அனைவரையும்‌ சமூக இடைவெளியுடன்‌ அமரவும்‌ மண்டப உரிமையாளர்கள்‌ வலியுறுத்த வேண்டும்‌. கோயம்புத்தூர்‌ மாநகராட்சி எல்லைக்குட்பட்ட கிராஸ்கட்‌ சாலை, 100 அடி ரோடு, ஒப்பணக்கார வீதி, இராமமூர்த்தி சாலை, சாரமேடு சாலை, ரைஸ்‌ மில்‌ சாலை, என்‌.பி.இட்டேரி சாலை, சிங்காநல்லூர்‌ சிக்னல்‌ முதல்‌ ஒண்டிப்புதூர்‌ மேம்பாலம்‌ வரை (திருச்சி ரோடு), ஹோப்‌ காலேஜ்‌ சிக்னல்‌ (அவிநாசி ரோடு),

காளப்பட்டி ரோடு, டி.பி.ரோடு, என்‌ எஸ்‌.ஆர்‌.ரோடு, ஆரோக்கியசாமி ரோடு, சரவணம்பட்டி, கணபதி சந்திப்பு, துடியலூர்‌ சந்திப்பு, பீளமேடு சந்திப்பு, என்‌.எச்‌.ரோடு, இடையர்‌ வீதி, வைசியாள்‌ வீதி, தாமஸ்‌ வீதி, வெரைட்டி ஹால்‌ ரோடு, ராஜ வீதி, பெரிய கடை வீதி, ரங்கே கவுண்டர்‌ வீதி, காந்திபுரம்‌ 1 முதல்‌ 11 வரை உள்ள தெருக்கள்‌ மற்றும்‌ சலிவன்‌ வீதி ஆகிய பகுதிகளில்‌ சனி மற்றும்‌ ஞாயிற்றுக்கிழமைகளில்‌ நிகழ்ச்சிகள்‌ இருந்தால்‌ நடைபெற தடை விதிக்கப்படுகிறது. மாநகராட்சியின்‌ இணையதளத்தில்‌ பதிவு செய்யப்படும்‌ விவரங்களை கொண்டு மாநகராட்சி அலுவலர்கள்‌ சம்பந்தப்பட்ட இடங்களில்‌ அரசின்‌ பாதுகாப்பு வழிமுறைகளான முகக்கவசம்‌ அணிதல்‌, சமூக இடைவெளியை பின்பற்றுதல்‌, 50 நபாகளுக்கு மிகாமல்‌ கலந்து கொள்ளுதல்‌ போன்ற நடைமுறைகள்‌ பின்பற்றப்படுகின்றனவா என கள ஆய்வு மேற்கொள்வார்கள்‌. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Views: - 124

0

0