ஆட்டோ தலைக்குப்புற கவிழ்ந்து விபத்து: பெண் உட்பட இருவர் காயம்

20 November 2020, 9:31 pm
Quick Share

திருப்பத்தூர்: ஆம்பூர் அருகே சென்னை – பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தின் மீது மோதாமல் இருக்க திருப்பிய போது கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பெண் உட்பட இருவர் காயம் அடைந்தனர்.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த விண்ணமங்கலம் பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் கோவிந்தசாமி என்பவர், இன்று தனது ஆட்டோவில் குடியாத்தம் பகுதியை சேர்ந்த லதா (52) மற்றும் துணி வியாபாரம் செய்யும் வட மாநில இளைஞர் ஆகியோருடன் ஆம்பூர் நோக்கி சென்னை – பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தனர்.

அப்போது சான்றோர்குப்பம் என்ற பகுதியில் ஆட்டோ வந்து கொண்டிருந்த போது ஆட்டோவின் அருகே தாறுமாறாக வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதாமல் இருக்க ஆட்டோ ஓட்டுநர் ஆட்டோவை திருப்பிய போது கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ சாலையின் ஓரம் தலைக்குப்புற கவிழந்து விபத்துக்குள்ளானது.

உடனடியாக விபத்தில் சிக்கியவர்களை மீட்ட அக்கம்பக்கத்தினர் அவர்களை சிகிச்சைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இவ்விபத்து குறித்து ஆம்பூர் நகர காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.

Views: - 0

0

0