யானைகளை பொதுமக்களே தன்னிச்சையாக விரட்டக் கூடாது: வனத்துறை சார்பில் விழிப்புணர்வு பேரணி!!

15 July 2021, 5:15 pm
Quick Share

கோவை: வனத்தை விட்டு வெளியேறும் யானைகளை பொதுமக்களே தன்னிச்சையாக விரட்டக் கூடாது, பட்டாசு வெடிப்பது, கூட்டம் கூடி கூச்சலிடுவதை தவிர்க்க வேண்டும் என வனத்துறை சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் அமைந்து உள்ளது. இங்குள்ள வனப்பகுதிகளில் யானை, மான், புலி, சிறுத்தை, காட்டெருமை, செந்நாய் உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குள் காணப்படுகின்றன. வறட்சி காலங்களில் தண்ணீர் மற்றும் உணவு தேடி யானை, மான் போன்ற வனவிலங்குகள் அடிக்கடி வனத்தை விட்டு வெளியேறி குடியிறுப்பு, மற்றும் விவசாய நிலங்களுக்கு வருவது வழக்கமானதாக உள்ளது.

இவ்வாறு காட்டு யானைகள் காட்டை விட்டு வெளியே வரும் போது வனத்துறைக்கு தகவல் தெரிவிக்காமல் பொதுமக்கள் கூட்டம் கூடி அதிக சத்தம் இடுவதும், விவசாயிகள் தன்னிச்சையாக பட்டாசுகளை வெடித்து யானைகளை விரட்டவும் முயற்சி செய்கின்றனர். இதனால் வன விலங்குகள் மிரண்டு மனித விலங்கு மோதல் ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளதாகவும் வனத்துறையினர் தெரிவிக்கின்றனர்.

இதை தடுக்கும் வகையில் பொதுமக்கள், மற்றும் விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வனத்துறை மற்றும் காவல்துறையினர் கலந்து கொண்ட விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது. நிகழ்ச்சியில் மேட்டுப்பாளையம் காவல் ஆய்வாளர் சிவக்குமார், மற்றும் வனச்சரக அலுவலர்கள் பழனிராஜா, செந்தில்குமார், மனோகரன் மற்றும் வேட்டைத் தடுப்பு காவலர்கள் உள்பட ஏராளமான வனப் பணியாளர்கள், காவல் துறையினருடன் இணைந்து மேட்டுப்பாளையம் உதகை சாலையில் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியவாறு அணிவகுத்துச் சென்றனர்.

பேரணியானது யானைகள் நடமாட்டம் அதிகமுள்ளதாகக் கருதப்படும் குரும்பனூர், தாசம்பாளையம் ,சிறுமுகை, காரமடை ஆகிய பகுதிகளுக்கு சென்று விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யப்பட்டது.

Views: - 47

0

0