பிறந்து 3 நாட்களே ஆன நிலையில் ரயில் பெட்டியில் கேட்பாரற்று கிடந்த பெண் குழந்தை மீட்பு: அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைப்பு

Author: kavin kumar
22 August 2021, 1:53 pm
Quick Share

வேலூர்: பிறந்து 3 நாட்களே ஆன நிலையில் ரயில் பெட்டியில் கேட்பாறற்று கிடந்த பெண் குழந்தையை இரயில்வே காவல் துறை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கொரோனா காலகட்டத்தில் இரயில்கள் இயக்கம் நிறுத்தப்பட்ட நிலையில் அனைத்து துறை அரசு பணியாளர்கள், இதர தனியார் துறை பணியாளர்கள் சென்று வர ஜோலார்பேட்டையில் இருந்து காட்பாடி வழியாக அரக்கோணம் வரை (Work man) பணியாளர்கள் சிறப்பு இரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த ரயில் நேற்று காட்பாடி ரயில் நிலையம் வந்த போது அதன் பொது பெட்டியில் உள்ள ஒரு அட்டை பெட்டியில் குழந்தை அழும் சந்தம் கேட்பதாக பயணிகள், தமிழக இரயில்வே காவல் துறையினரிடம் தகவல் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து காட்பாடி இரயில் நிலைய தமிழ்நாடு இரயில்வே காவல் நிலைய உதவி ஆய்வாளர் எழில் வேந்தன் சென்று பார்த்த போது ஒரு கட்டை பையில் போட்டு அட்டை பெட்டியில் வைக்கப்பட்ட பிறந்து 3 நாட்களே ஆன பெண் குழந்தை இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து குழந்தையை மீட்ட காவல் துறையினர் அழுதுகொண்டிருந்த குழந்தையை சமாதானப்படுத்தி அதற்கு பால் கொடுத்துள்ளனர். பின்னர் இது குறித்து மாவட்ட சமூக நலத்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த சமூக நலத்துறையினரிடம் குழந்தை ஒப்படைக்கப்பட்டது. பின்னர் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

இரயில் பெட்டியில் குழந்தையை விட்டு சென்றது யார்? என்பது குறித்து காட்பாடி இரயில்வே காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் குழந்தைக்கான மருத்துவ பரிசோதனை முடிந்த பிறகு திருப்பத்தூரில் உள்ள அரசு காப்பகத்தில் குழந்தை ஒப்படைக்கப்பட உள்ளது.

Views: - 558

0

0