செல்போன்களை லாவகமாக திருடி செல்லும் பலே திருடன் கைது: 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 10 செல்போன்கள் மீட்பு

Author: kavin kumar
21 August 2021, 3:58 pm
Quick Share

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் திறந்து இருக்கும் வீட்டில் புகுந்து விலை உயர்ந்த செல்போன்களை லாவகமாக திருடி செல்லும் திருடனை போலீசார் கைது, அவனிடமிருந்து சுமார் 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 10 செல்போன்கள் கைப்பற்றப்பட்டு உரியவர்களிடம் காவல்துறையினர் ஒப்படைத்தனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் தொழிற்சாலைகள் அதிகம் நிறைந்து காணப்படுவதால் வெளிமாநிலங்களில் இருந்து லட்சக் கணக்கானோர் காஞ்சிபுரம் சுற்றியுள்ள பகுதிகளில் தங்கி பகல் மற்றும் இரவு நேரங்கள் என ஷிப்ட் முறைகளில் வேலை செய்து வருகின்றார்கள். இவர்களில் பெரும்பாலோனர் இரவு நேரங்களில் வேலை செய்துவிட்டு மிகவும் சோர்வாக தங்கள் தங்கியுள்ள அறைகளுக்கோ அல்லது வீடுகளுக்கோ வந்து அசந்து தூங்குவர்.காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே என்ஜிஓ நகர் பகுதியை சேர்ந்த குமார் என்பவன் காஞ்சிபுரம் நகரை சுற்றியுள்ள பகுதிகளில் திறந்த இருக்கும் வீட்டின் உள்ளே புகுந்து யாருக்கும் தெரியாமல் அங்கு உள்ள செல்போன்களை மிக லாவகமாக திருடிக்கொண்டு தப்பி விடுவார்.

சிவகாஞ்சி காவல் நிலையத்தில் செல்போன்களை பறிகொடுத்தவர்கள் அளித்த புகாரின்பேரில் காவல் உதவி ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி மப்டியில் ரோந்து சென்று செல்போன் திருடனை மடக்கிப்பிடித்து கைது செய்தார். மேலும் அவனிடம் இருந்து சுமார் ஒன்றரை லட்ச ரூபாய் மதிப்புள்ள 8 விலை உயர்ந்த செல் போன்களும், இரண்டு சாதாரண போன்களும் என மொத்தம் 10 செல்போன்கள் கைப்பற்றப்பட்டது. செல்போன்களை பறிகொடுத்த நபர்களை காவல்நிலையத்திற்கு வரவழைத்து காவல் ஆய்வாளர் சிவக்குமார் முன்னிலையில் செல்போன்கள் வழங்கப்பட்டது.

செல்போன்களை பறிகொடுத்த நபர்கள் இதைப்பற்றி கூறும்போது எங்கள் நிறுவனத்தின் அனைத்து ஆவணங்களையும் இந்த செல்போன்களில் தான் பதிவு செய்து வைத்திருந்தோம் செல்போன் பறி கொடுத்ததால் நாங்கள் மனரீதியாக பாதிக்கப்பட்டோம். செல்போன்களை மீட்டு தந்த காவல் துறையினருக்கு நன்றி என தெரிவித்தனர்.

Views: - 237

0

1