பாஜக வழக்கறிஞர் பிரிவு செயலாளர் மோசடி புகாரில் கைது: குவியும் தொடர் புகார்

Author: Udhayakumar Raman
26 September 2021, 3:53 pm
Quick Share

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் வழக்கறிஞர் பிரிவு செயலாளர் சிவ.அரவிந்தன் கைதானதை தொடர்ந்து அவர் மீது மாவட்ட குற்றப்பிரிவு அலுவலத்தில் மோசடி புகார்கள் குவிகின்றது.

காஞ்சிபுரம் அடுத்த வையாவூர் பகுதியை சேர்ந்தவர் வழக்கறிஞர் சிவ.அரவிந்தன். இவர் பாரதிய ஜனதா கட்சியின் காஞ்சிபுரம் மாவட்ட பாஜக வழக்கறிஞர் பிரிவு செயலாளர் உள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னை திருவான்மியூரில் லீனா பெர்னாண்டஸ் என்ற மூதாட்டியின் 2 கோடி ரூபாய் மதிப்பிலான வீட்டை 40 ஆயிரம் ரூபாய்க்கு மாத வாடகைக்கு ஒப்பந்தம் செய்து 4 மாதங்கள் மட்டும் வாடகை கொடுத்து விட்டு அந்த வீட்டை 17 லட்சம் ரூபாய் பெற்றுக்கொண்டு வேறு ஒருவருக்கு அவர் மேல்வாடகைக்கு கொடுத்துள்ளார். மேலும் வாடகை எடுத்த வீட்டை போலி ஆவணங்கள் மூலம் 2 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்ய உள்ளதாக தகவல் தெரியவந்ததின் பேரில், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் லீனா பெர்னாண்டஸ் அவர்கள் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த நீலாங்கரை போலீசார், விசாரணை நடத்தி பாஜக நிர்வாகி சிவ. அரவிந்தன் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து சிறைக்கு அனுப்பினர். சிவ.அரவிந்தன் கைதாகி சிறைக்கு சென்ற தகவலை தெரிந்துகொண்ட பலர் தாங்களும் ஏமாற்றப்பட்டுள்ளதாக கூறி காஞ்சிபுரம் மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்தில் புகார் கொடுத்து வருகின்றனர். குறிப்பாக காஞ்சிபுரம் செங்கழுநீர்ஓடை வீதி பகுதியை சேர்ந்த தொழிலதிபர் ஜேபி.நாகராஜ் என்பவரிடம் , பாஜக கட்சியில் மாநில அளவில் பதவி வாங்கித் தருவதாகக் கூறி 16 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் வாங்கிக் கொண்டு ஏமாற்றியதாகவும்,

மத்திய அரசில் பட்டு வாரிய உறுப்பினர் பதவி வாங்கித் தருவதாக கூறி ஓரிக்கை பகுதியை சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவரிடம் 55 லட்ச ரூபாய் பணம் வாங்கி மோசடி செய்ததாகவும், பாஜகவில் பதவி வாங்கித் தருகிறேன் என்று கூறி சின்ன காலண்டர் தெருவை சேர்ந்த மாதவனிடம் 15 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணம் வாங்கி மோசடி செய்ததாகவும் கூறி ஒரே நாளில் 86 லட்சத்தி பத்தாயிரம் ரூபாய் பணத்தை வாங்கித் தருமாறு மூன்று பேர் சிவ.அரவிந்தன் மீது மாவட்ட குற்றப்பிரிவு துணை கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்ததால் காஞ்சிபுரம் மாவட்ட பாஜகவினர் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Views: - 113

0

0