பார்சலில் வெடிகுண்டு மூலப்பொருட்கள் அனுப்பிய விவகாரம்: தனிப்படை போலீசாரிடம் சிக்கிய 2 பேர்

26 September 2020, 8:57 pm
Quick Share

திருவாரூர்: திருவாரூரில் ஸ்டுடியோ உரிமையாளருக்கு பார்சலில் வெடிகுண்டு மூலப்பொருட்கள் அனுப்பிய விவகாரத்தில் தஞ்சை மற்றும் அறந்தாங்கியை சேர்ந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் கடைவீதியில் வீரக்குமார் என்பவர் ஸ்டுடியோ கடை நடத்தி வருகிறார். இவருக்கு கடந்த 19ஆம் தேதி கொரியர் பார்சல் மூலமாக பாறைகளை வெடிக்க வைக்கும் வெடி குண்டு தயாரிக்கும் மூலப் பொருட்களான ஜெலட்டின் குச்சி மட்டும் டெட்டனேட்டர்கள் வந்தது. இதுதொடர்பாக வீரகுமார் நீடாமங்கலம் காவல் துறையினரிடம் புகார் அளித்ததன் அடிப்படையில் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதேபோல் கடந்த 18ஆம் தேதி தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு பகுதியைச் சேர்ந்த விவசாயி ஒருவருக்கும் வெடிகுண்டு மூலப்பொருட்கள் அடங்கிய பார்சல் வந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் திருவாரூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் துரை தலைமையில் 2 தனிப்படை அமைக்கப்பட்டு காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். விசாரணையின் தொடர்ச்சியாக நீடாமங்கலத்தில் வாகன சோதனையின்போது சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில், வந்த இரண்டு நபர்களை பிடித்து விசாரணை செய்தபோது அவர்கள் கூரியர் பார்சல் மூலமாக நீடாமங்கலம் ஸ்டூடியோ உரிமையாளருக்கு வெடிகுண்டு மூலப்பொருட்கள் அனுப்பியது தெரியவந்தது. இந்த நிலையில் அறந்தாங்கி பகுதியைச் சேர்ந்த சத்தியமூர்த்தி மற்றும் தஞ்சாவூரை சேர்ந்த அமீர் சையது ஆகிய இருவரையும் நீடாமங்கலம் போலீசார் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Views: - 10

0

0