நில உடமை பதிவேடுகள் மறு வகைபாடு செய்யாததே முறைகேடுகளுக்கு காரணம்… பி.ஆர்.பாண்டியன் குற்றச்சாட்டு…

13 August 2020, 10:10 pm
Quick Share

திருவாரூர்: விவசாயிகளுக்கான திட்டங்களில் 50% ஊழல் முறைகேடுகளுக்கு காரணம் நில உடமை பதிவேடுகள் மறு வகைபாடு செய்யாததே என பி.ஆர்.பாண்டியன் குற்றச்சாட்டியுள்ளார்.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:- தமிழ்நாட்டில் சுமார் 1 கோடிக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வேளாண் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பிரதமர் (பி.எம்.கிசான்) விவசாயிகள் ஊக்கத்திட்டத்தின் அடிப்படையில் ஆண்டுதோறும் ஹெக்டேர் 1க்கு சிறு குறு விவசாயிகளுக்கு ரூ 6000ம் வீதம் 3 தவணைகளாக பிரித்து சுமார் 65 லட்சம் விவசாய குடும்பங்களுக்கு வழங்க தமிழக வேளாண் துறையால் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

இவற்றில் சுமார் 40 லட்சம் குடும்பங்களுக்கு மட்டுமே நிதி வழங்கப்பட்டு வருகிறது. மீதம் 25 லட்சம் குடும்பங்களுக்கு பயனாளிப் பட்டியல் இறுதி செய்யப்படாமல் உண்மையான விவசாயிகள் பயன் பெற முடியாத நிலையும் உள்ளதாக தெரியவருகிறது. மேலும் கூடுதலாக 50 லட்சத்திற்கும் மேற்ப்பட்ட குடும்பங்கள் 25 ஆண்டுகளுக்கும் மேலாக விவசாயத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் அவர்களை பயனாளிபட்டியலில் கொண்டு வர முடியாத நிலை தொடர்கிறது. இந்நிலையில் கடலூர், திருவள்ளூர் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் பிஎம் கிசான் திட்டத்தில் ஊழல் முறைகேடுகள் நடந்துள்ளதாக வெளிவந்துள்ள செய்தி அதிர்ச்சியளிக்கிறது.

இதற்கு அடிப்படை காரணம் தமிழ்நாட்டில் 1984க்கு பிறகு நில உடமைப் பதிவேடுகள் மறு வகைப்பாடு செய்யப்படவில்லை. இதனால் ஆண்டுதோறும் ஜமாபந்தி கூட்டங்கள் கூட ஒத்திசைவு இறுதிபடுத்தப்படாமலேயே சடங்கு நிகழ்வாக முடிகிறது. இந்நிலையில் மத்திய அரசு அனைத்து துறைகளும் டிஜிட்டல் இந்தியா திட்டத்தில் கணினி மயமாக்கப்பட்டுள்ளதாகவும், விவசாயிகளுக்கு ஒதுக்கப்படும் திட்டங்களுக்கான பயனாளிகள் இணைய தளம் மூலமாக தேர்வு செய்து வெளியிடப்பட வேண்டும் என உத்திரவு வழங்கி மத்திய அரசின் கண்கானிப்பில் கொண்டு சென்று உள்ளது.

இதனை பின்பற்றி கிசான் கிரெடிட் கார்டு வழங்கப்பட்டு, அவர்களுக்கு மட்டுமே கடன் உள்ளிட்ட அனைத்து விவசாய மேம்பாட்டுத் திட்டங்களும் செயல் படுத்த கொள்கை முடிவெடுத்து பின் பற்றி வருகிறது. ஆனால் தமிழ்நாட்டில் எந்தவொரு விவசாயிக்கும் இது நாள் வரை கிசான் கிரெடிட் கார்டு வழங்கப் படவில்லை. இதனால் விவசாயிகளுக்கு ஒதுக்கப்படுகிற திட்டங்களுக்கான நிதிகள் 50% ஊழல் முறைகேடுகளுக்கு இடமளிக்கிறது. இவைகள் அனைத்துக்குமே அடிப்படை காரணம் நில உடமைப் பதிவேடுகள் தமிழகத்தில் இன்றைய நிலைக்கு மறு வகைப்பாடு செய்து இனைய பதிவேற்றம் செய்யப்படாது தான் என்பதை மத்திய, மாநில அரசுகள் உணர வேண்டும்.

எனவே தமிழக அரசு உடனடியாக உயர் மட்டக்குழு அமைத்து வருவாய்த்துறை நில உடமைப் பதிவேடுகளை இன்றைய நிலைக்கு மறுவகைப்பாடு செய்து கனினியில் பதிவேற்றம் செய்திட முன்வர வேண்டும். கோவில், அறக்கட்டளைகளுக்கு சொந்தமான நிலங்களில் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு குத்தகைப் பதிவு செய்து தர வேண்டும். குத்தகை பாக்கி என்கிற பெயரில் பதிவு ரத்து செய்வதற்கு தடை விதிக்க வேண்டும். வறட்சி, பேரிடர் பாதித்த மாவட்டங்களாக அரசிதழில் வெளியிடப்பட்ட ஆண்டுகளுக்கு குத்தகை தொகை பாக்கிகள் அனைத்தையும் தள்ளுபடி செய்து குத்தகை விவசாயிகள் உரிமை பாதுகாக்க வேண்டும். மேலும் வருவாய் கிராமங்கள் தோறும் சாகுபடி பணியில் ஈடுபடும் விவசாயிகள் விபர பட்டியலை ஆண்டுக்கொருமுறை தயார் செய்து வெளியிட வேண்டுமென வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

Views: - 10

0

0