விவசாயிகளை பாதுகாக்க தமிழக முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க பி.ஆர்.பாண்டியன் வலியுறுத்தல்…

Author: kavin kumar
25 October 2021, 2:28 pm
Quick Share

திருவாரூர்: முல்லைப் பெரியாறு அணையின் 142 அடி கொள்ளளவு உயர்த்தி 5 மாவட்ட விவசாயிகளை பாதுகாக்க தமிழக முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் பி.ஆர்.பாண்டியன் வலியுறுத்தியுள்ளார்.

தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பிஆர்.பாண்டியன் மன்னார்குடியில் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:- தமிழ்நாட்டில் தேனி மதுரை திண்டுக்கல் ராமநாதபுரம் சிவகங்கை உள்ளிட்ட 5 மாவட்ட விவசாயிகள் முல்லைப் பெரியாறு,வைகை நீர் பாசனத்தை நம்பி வாழ்வாதாரமாக வாழ்ந்து வருகிறார்கள். கடந்த பல ஆண்டுகளாக ஒரு போகம் சாகுபடி கூட முழுமையாக மேற்கொள்ள முடியாமல் வறட்சியால் பாதிக்கப்பட்டதோடு, மிகப்பெரிய பொருளாதார இழப்பை சந்திப்பது தொடர்கதையாகி உள்ளது. இந்நிலையில் நடப்பாண்டு உரிய அளவுக்கு தென்மேற்கு பருவ மழை பெய்து முல்லைப் பெரியாறு அணை 136 அடி நிரம்பி வருகிறது.142 அடி கொள்ளளவை உயர்த்தினால் 5 மாவட்ட விவசாயிகள் சாகுபடி மேற்கொள்வதற்கு வசதியாக இருக்கும்.

கேரளாவில் பெரும் மழை பொழிவால் முல்லைப் பெரியாறு அணையை திறக்க வேண்டும் என வலியுறுத்தி கேரள முதலமைச்சர் பினராயி விஜயன்,தமிழக முதலமைச்சர் முக.ஸ்டாலின் அவர்களுக்கு எழுதி உள்ள கடிதம் உள்நோக்கம் கொண்டதாகும். உச்சநீதிமன்றத்தில் 142 அடி தண்ணீரை தேக்க கூடாது எனவும் முல்லைப் பெரியாறு அணை பலவீனமாக உள்ளதாகவும் கேரளாவின் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. அவ்வழக்கு குறித்து மத்திய அரசால் நியமிக்கப்பட்ட ஆய்வுக் குழுவின் அறிக்கையின் அடிப்படையில் அணை வலுவாக உள்ளதாகவும், 142அடி தண்ணீரை தேக்கி வைக்க எந்தத் தடையும் இல்லை என்று மத்திய அரசு தெரிவித்ததை ஏற்றுக் கொண்ட உச்சநீதிமன்றம்,அதனை உறுதி செய்து வழக்கையும் கடந்த வாரம் தள்ளுபடி செய்திருக்கிறது. இதனால் ஏற்ப்பட்டுள்ள அரசியல் அழுத்தத்தின் காரணத்தினால் எழுதப்பட்ட கடிதமாக தோன்றுகிறது.

கேரளாவில் பெய்து வரும் தென்மேற்கு பருவ மழையும் முடிவடையும் நிலை உள்ளது.555 அடி கொள்ளளவு கொண்ட இடுக்கி அணையில் தற்போது 444 அடி மட்டுமே தண்ணீர் நிரம்பியுள்ளது. முன்னெச்சரிக்கையாக கேரளா அரசாங்கமும் ஒரு லட்சம் கனஅடி தண்ணீரை வெளியேற்றி வருகிறது.இதன் மூலம் கேரளாவிற்கு எந்த பாதிப்பும் இல்லை என்பது தெள்ளத் தெளிவாக தெரிகிறது. நிலைமை இவ்வாறு இருக்க கேரள முதலமைச்சர் முல்லைப் பெரியாறில் 136 அடிக்கு மேல் தண்ணீரை தேக்கக்கூடாது உடனடியாக தண்ணீர் திறக்க வேண்டும் என தமிழக முதலமைச்சருக்கு எழுதுகிற கடிதம் 5 மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அழித்து விடும் உள்நோக்கம் கொண்டதாகும்.

எனவே 142 அடி தண்ணீர் இருப்பை உயர்த்தி 5 மாவட்ட விவசாயிகளும் பயன் பெறுகின்ற வகையில் தண்ணீரை தேக்கி வைக்க வேண்டிய பொறுப்பு தமிழக அரசுக்கு உள்ளது. இதனை உச்சநீதிமன்றமும் உறுதிப்படுத்தியுள்ளதை நினைவுப்படுத்தி, தற்போதைய கடிதத்திற்கு தமிழக முதலமைச்சர் தமிழகத்தின் நிலையை தெளிவுப்படுத்தி கடிதம் எழுதி கேரள முதலமைச்சரின் கடிதத்திற்கு முற்றுப்புள்ளிவைத்திட வேண்டும்.மேலும் அணைக்கு இருமுனை மின் இணைப்பு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. மும்முனை மின்இணைப்பு வழங்கினால் தான் அணைக்கதவுகள் ஒரே நேரத்தில் திறந்து மூட முடியும் எனவே உடன் மும்முனை மின் இணைப்பு பெறவேண்டும்.

அணைக்கு பொறியாளர்கள் சென்று வர தமிழக அரசு வழங்கிய அண்ணா படகினை இயக்க கேரளம் அனுமதி வழங்க மறுத்ததால் 5 வருடங்களுக்கும் மேலாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அச்சுறுத்தலின்றி அவசர பணிகளை மேற்க்கொள்ள அவ்வபோது பொறியாளர்கள் நமது படகு மூலம் சென்று வர அனுமதி பெற வேண்டும்.செயற்பொறியாளர் உள்ளிட்ட பொறியாளர்கள் அணைப்பகுதியில் தங்கி பணியாற்றவும், அலுவலக செயல்பாட்டிற்கும் உரிய அனுமதியும், பாதுகாப்பும் கோரிப் பெற வேண்டும்.152 அடி கொள்ளளவு உயர்த்துவதற்கு பேபி அணையை பலப்படுத்துவதற்கான நடவடிக்கைகளையும் தமிழக அரசு உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் மத்திய அரசின் ஆய்வுக் குழுவின் பரிந்துரையின் பேரில் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறோம்.

காவிரியில் நச்சுக் கலந்த கழிவு நீர் ஆலைகளில் இருந்து கர்நாடக மாநிலத்தில் வெளியேற்றப்படுவதால் காவிரி நதி மாசடைந்து காவிரி தண்ணீர் விஷத் தன்மையாக மாறி உள்ளது என்பதை ஏற்கனவே ஐஐடி ஆய்வாளர்கள் கள ஆய்வு செய்து ஆதாரத்தோடு வெளியிட்டுள்ளனர். இந்நிலையில் மேட்டூர் அணையில் மாச கலந்த கழிவுநீரால் தண்ணீர் மாசடைந்து நிறம் மாறுதல் அடைந்திருப்பதை பார்த்து மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
காவிரி நீர் பாசனத்திற்கு மட்டுமில்லாமல் தமிழகத்தில் சென்னை உட்பட 12 மாநகராட்சிகளை உள்ளடக்கிய 32 மாவட்டங்களில் வாழும் மக்களின் முழு குடிநீர் ஆதாரமாக விளங்குகிறது. இதனை கருத்தில் கொண்டு ஆய்வு நிலையிலேயே தொடராமல்,உடனடியாக தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள காவிரி மேலாண்மை ஆணையம் மூலமாக உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு தமிழக அரசு முன்வர வேண்டும்.

தமிழகத்தில் அமுதம் கிராம அங்காடிகள் மூலம் பனைவெல்லம் விற்பனை செய்வதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளதை வரவேற்கிறோம், பாராட்டுகிறோம்.பனை ஏறும் தொழிலாளர்கள் பற்றாக்குறையால் பனை மரத்தின் பயனை முழுமையாக பயன்படுத்த முடியாமல் தடைபட்டுள்ளது. எனவே நவீன இயந்திரங்களைக் கொண்டு பதநீர் மற்றும் நுங்கு உள்ளிட்ட மருத்துவ குணம் கொண்ட உணவுப் பொருட்களை மதிப்புக் கூட்டுப் பொருளாக மாற்றம் செய்து பயன்படுத்துவதற்கு புதிய தொழில்நுட்பங்களை கண்டறிந்து வழங்க வேண்டும் என வலியுறுத்துகிறோம் என்றார்.

Views: - 190

0

0