போக்குவரத்துக்கு தயார்: எவ்வளவு பேருந்துகள் இயக்கப்படும்?

4 July 2021, 6:52 pm
Quick Share

கரூர்: நாளை முதல் பேருந்துகள் இயக்கப்பட உள்ளதால் கரூர் பணிமனையில் உள்ள பேருந்துகளை தயார் செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

கொரனோ தொற்று பரவாமல் இருக்க முழு ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டது. இதனால் தமிழகம் முழுவதும் கடந்த மே மாதம் 10ம் தேதி முதல் பேருந்துகள் இயக்கம் நிறுத்தப்பட்டது. இதன் ஒரு பகுதியாக கரூர் போக்குவரத்து மண்டல அலுவலகத்திற்கு உட்பட்ட கரூர் 1, கரூர் 2, அரவக்குறிச்சி, குளித்தலை, முசிறி உள்ளிட்ட 5 பணிமனைகளில் உள்ள 260 பேருந்துகளும் நிறுத்தப்பட்டன. அதன் பிறகு கொரனோ தொற்று அதிகமுள்ள 11 மாவட்டங்களில் கரூர் மாவட்டமும் உள்ளதால் பேருந்துகள் கடந்த வாரங்களில் கூட இயக்கப்படவில்லை. இந்நிலையில் நாளை முதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால் பொது போக்குவரத்திற்கு மாநில அரசு அனுமதி அளிக்கப்பட்டதை அடுத்து நாளை முதல் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

இதற்காக கரூர் பணிமனையில் உள்ள பேருந்துகள் தயார் செய்யும் பணியில் போக்குவரத்து ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். பேருந்துகளில் உள்ள சக்கரங்களுக்கு காற்றின் அளவை பரிசோதித்தல், பேருந்து வெளிப் பகுதியை கழுவுதல், இருக்கைகளுக்கு கிருமி நாசினி தெளித்தல், பேருந்தை இயக்கி பார்த்தல் போன்ற பணிகளில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். திருச்சி மாவட்டம் முசிறி பணிமனையில் உள்ள 55 பேருந்துகளும் ஏற்கனவே இயக்கப்பட்டு வருவதால், கரூர் மாவட்டத்தில் உள்ள மற்ற 4 பணிமனைகளில் இருந்து 205 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

நாளை காலை 6 மணி முதல் பேருந்துகள் இயக்கப்படும் என்றும், ஓட்டுநர்கள், நடத்துனர்களுக்கு முககவசம், கபசுர குடிநீர் வழங்கியும், உடல் வெப்ப பரிசோதனை செய்தும் அனுப்பி வைக்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், மக்களின் தேவைக்கு ஏற்ப 24 மணி நேரமும் பேருந்துகள் இயக்கப்படும் என்றனர். சுமார் 40 நாட்களுக்குப் பிறகு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதால் அதிகாரிகளும், பொதுமக்களும் எதிர்பார்புடன் காத்திருக்கின்றனர்.

Views: - 184

0

0