நதியை ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டு வரும் கட்டிடத்தை அகற்ற கோரிய வழக்கு: கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்ய உத்தரவு

23 September 2020, 7:09 pm
Madurai HC- updatenews360
Quick Share

மதுரை: மதுரையில் சட்டவிரோதமாக வீட்டுவசதி வாரிய இடத்தையும் கிருதுமால் நதியை ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டு வரும் கட்டிடத்தை அகற்ற கோரிய வழக்கில் அரசு தரப்பில் பதிலளிக்கவும், மனுதாரர் தரப்பில் கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்யவும் உயர் நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரையை சேர்ந்த கண்ணன் என்பவர். உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில், வில்லாபுரம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் தனியார் நிறுவனம் சார்பில் அகமத் என்பவர் ஐந்து மாடிக் கட்டடத்தை கட்டி வருகின்றனர். இந்த கட்டிடத்திற்கு உரிய அனுமதி எதுவும் பெறப்படவில்லை. மற்றும் கட்டிடத்தின் உறுதித் தன்மை மற்றும் மண் பரிசோதனை எதுவும் செய்யப்படவில்லை. மேலும் கட்டிடத்தில் வாகன நிறுத்துமிடம் அவசர வழி தீ தடுப்பு சாதனங்கள் போன்ற அடிப்படை சட்ட விதிகள் பின்பற்றப்படவில்லை , உள்ளூர் திட்ட குழுமம், மாநகராட்சி அனுமதி போக்குவரத்து மற்றும் காவல்துறை அனுமதி போன்ற எதுவும் பெறப்படவில்லை.

இதனால் இந்த கட்டிடம் செயல்பாட்டிற்கு வந்தால், பொதுமக்கள் கூடும் இடத்தில் ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டால் ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனம், போன்ற வாகனங்கள் வந்து செல்ல இயலாது. மேலும் கிருதுமால் நதி ஓடும் பகுதியை ஆக்கிரமித்து கழிவு நீர் செல்வதற்கு வழி வகுத்துள்ளனர். மேலும் விமான நிலையம் செல்லும் சாலை பகுதியையும் ஆக்கிரமித்துள்ளனர்.எனவே இந்த ஐந்து மாடிக் கட்டிடத்தை செயல்படுவதற்கு தடை விதிக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் தெரிவித்துள்ளார். இந்த மனு நீதிபதிகள் சத்யநாராயணன், ராஜமாணிக்கம் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது, இதனை விசாரித்த நீதிபதிகள், தமிழக அரசின் சார்பில் மதுரை மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி கமிஷனர் திட்ட குழு ஆணையர் ஆகியோர் பதிலளிக்கவும், மனுதாரர் தரப்பில் கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஒத்தி வைத்துள்ளனர்.