5 சிறுமிகளுக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்த வழக்கு: 6 குற்றவாளிகளை கைது

9 November 2020, 11:48 pm
Quick Share

புதுச்சேரி: புதுச்சேரியில் 5 சிறுமிகளுக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்த புகாரில் தொடர்புடைய 6 குற்றவாளிகளை கைது செய்து அவர்கள் மீது போக்ஸோ வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், மேலும் இவ்வழக்கை ஐ.பி.எஸ் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்த உள்ளனர் என முதுநிலை காவல் கண்காணிப்பாளர் பிரதிக்‌ஷா கோத்ரா தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி அருகே உள்ள கீழ் சாத்தமங்கலம் பகுதியில் கடந்த மாதம் 22ஆம் தேதி வாத்து வளர்ப்புக்காக கொத்தடிமைகளாக அடைத்து வைக்கப்பட்டிருந்த 5 சிறுமிகளை புதுச்சேரி குழந்தைகள் நல ஆணைய அதிகாரிகள் மீட்டனர். தொடர்ந்து அவர்களை காப்பகத்தில் வைத்து விசாரணை நடத்தியதில் சிறுமிகளுக்கு வாத்து பண்ணையின் உரிமையாளர் கன்னியப்பன் உட்பட 11பேர் கொண்ட கும்பல் பாலியல் துன்புறுத்தல் செய்ததாக தெரிவித்துள்ளனர். இதனையடுத்து கன்னியப்பன் உட்பட 6பேரை கைது செய்த போலீசார் அவர்கள் மீது போஸ்கோ வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தலைமறைவாக உள்ளவர்களை தேடி வருகின்றனர்.

இதேபோல் பாதிக்கப்பட்ட 5 சிறுமிகளும் தற்போது மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்காக அரசு குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவ்வழக்கு தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த முதுநிலை காவல் கண்காணிப்பாளர் பிரதிக்‌ஷா கோத்ரா, 5 சிறுமிகளுக்கு பாலியல் துன்புறுத்தல் வழக்கில் மேலும் யாருக்காவது தொடர்பு உள்ளதா என்பது குறித்து விசாரணை நடத்த ஐபிஎஸ் திவ்யா தலைமையிலான போலீசார் குழு விசாரணை நடத்தி வருவதாகவும், இதுபோன்ற குழந்தைகள் கொத்தடிமைகளாக அடைத்து வைக்கப்பட்டிருந்தால் அருகில் உள்ள காவல் நிலையம் அல்லது 1031, 112 என்ற எண்ணுக்கு பொதுமக்கள் தகவல் கொடுத்தால் அவர்களை மீட்க உதவியாக இருக்கும் என்றார்.

Views: - 16

0

0