கொரோனா பரிசோதனை முடிவுகளை குறிப்பிட்ட காலத்திற்குள் வெளியிட உத்தரவிடக் கோரிய வழக்கு: பட்டியலிட உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு…

17 September 2020, 8:57 pm
HC Madurai 01 updatenews360
Quick Share

மதுரை: தமிழகத்தில் கொரோனா பரிசோதனை முடிவுகளை குறிப்பிட்ட காலத்திற்குள் வெளியிட உத்தரவிடக் கோரிய வழக்கை, அது தொடர்பான வழக்குகளிடன் சேர்த்துப் பட்டியலிட உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

திருச்சி மாவட்டம் வீரேஸ்வரம் ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த சிவா உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில்,” கொரோனா நோய் பரவலை தடுக்கும் விதமாக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் சில குறிப்பிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள தவறிவிட்டது. கொரோனா பரிசோதனை முடிவுகளை குறிப்பிட்ட கால இடைவெளிக்குள் வழங்க வேண்டும் என்பது போன்ற எவ்வித விதிகளும் பிறப்பிக்கப்படவில்லை. தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை செல்வோருக்கு கொரோனா பரிசோதனை முடிவுகள் வெளிவராமல் சிகிச்சைகள் அளிக்கப்படுவதில்லை.

மாரடைப்பு, இருதயக் கோளாறுகள், கர்ப்பிணிகள் ஆகியோருக்கும் முதல் உதவி செய்யக்கூட மருத்துவமனை நிர்வாகம் தயங்குகிறது. இதன் காரணமாக சில நேரங்களில் உயிர் இழப்புகளும் ஏற்படுகின்றன. எனது மனைவிக்கும் இதுபோல கொரோனா பரிசோதனை முடிவுகள் வெளிவர 8 நாட்களுக்கும் தாமதம் ஆன நிலையில், பல நாட்களுக்குப் பிறகு அவரை பரிசோதித்த மருத்துவர், முன்கூட்டி அழைத்து வந்திருந்தால் பிரச்சனை குறைவாக இருந்திருக்கும்” என மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இது போல பலரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

ஆகவே குறைந்தபட்சம் அவசர சிகிச்சை தேவைப்படுவோரின்ன் கொரோனா பரிசோதனை முடிவுகளையாவது விரைவாக வெளியிட கோரி மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. ஆகவே தமிழகத்தில் கொரோனா பரிசோதனை முடிவுகளை குறிப்பிட்ட காலத்திற்குள் வெளியிட உத்தரவிட வேண்டும்” என கூறியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சத்தியநாராயணன், ராஜமாணிக்கம் அமர்வு, இது போன்ற கோரிக்கைகளைக் கொண்ட வழக்குகளுடன் சேர்த்துப் பட்டியலிட உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தார்.