கணவன், மனைவிக்கு உரிய இழப்பீடு வழங்கக் கோரி வழக்கு: தற்போதைய நிலை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

10 September 2020, 9:02 pm
HC Madurai 01 updatenews360
Quick Share

மதுரை: இருசக்கர வாகனம் மோதியதைத் தட்டிக்கேட்டதால் எழுந்த பிரச்சனையில் தாக்கப்பட்ட கணவன், மனைவிக்கு உரிய இழப்பீடு வழங்கக் கோரி வழக்கின் தற்போதைய நிலை குறித்து, அரசுத்தரப்பில் அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளார்.

மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் ரத்தினம், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அதில்,” சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூர் அருகேயுள்ள பூலாங்குறிச்சியைச் சேர்ந்த செந்தில் என்பவர் மீது இரு சக்கர சென்ற பிரகாஷ் என்பவர் கடந்த ஆகஸ்ட் 1ல் மோதியுள்ளார். இதை தட்டிக் கேட்டதால் ஆத்திரமடைந்து தகராறில் ஈடுபட்டுள்ளார். பின்னர், செந்திலையும், அவரது மனைவியையும் தாக்கியுள்ளார். பிரகாஷிற்கு ஆதரவாக வந்த மேலும் சிலரும் தாக்கியுள்ளனர். இவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பூலாங்குறிச்சி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. காயமடைந்த இருவருக்கும் முறையான சிகிச்சை கிடைக்கவும் நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த தகவலறிந்து பூலாங்குறிச்சியில் வசிக்கும் ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி செல்வம், புதுக்கோட்டை அரசு மருத்துவமனை மருத்துவர்களை தொடர்பு கொண்டு உரிய சிகிச்சையளிக்கும்படி கூறியுள்ளார். ஆனால், முறையான சிகிச்சையளிக்காமல் வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளனர். அதே நேரம் பூலாங்குறிச்சி காவல்துறை முறையான பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யவில்லை. இது குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி செல்வம், ஆட்சியர் மற்றும் காவல்துறையினரிடம் முறையான பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்கும் படி கூறியுள்ளார்.

ஆனாலும் உரிய நடவடிக்கை எடுக்காததால், உள்துறை செயலரை தொடர்பு கொண்டுள்ளார். ஆனால், அவரோ டிஜிபியை தொடர்பு கொள்ளுமாறு அவரது தொடர்பு எண்ணை கொடுத்துள்ளார். நீதிபதி உள்ளிட்ட கிராமத்தினர் முறையான விசாரணை கோரி காவல் நிலையம் முன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.  இது தவறான நிர்வாக நடைமுறையை காட்டுகிறது. முறையான விசாரணை கோரிய நீதிபதிக்கே இந்த நிலை ஏற்படுவதை ஏற்க முடியாது. பல்வேறு வழக்குகளில் காவல்துறையினரின் அனுகுமுறை குறித்து நீதிமன்றம் பல கருத்துக்களை தெரிவிக்கிறது.

ஓய்வு பெற்ற நீதிபதி தலையிட்டும் உரிய நடவடிக்கை எடுக்காததால் கடும் மனஉளைச்சலுக்கு ஆளாகியுள்ள செந்தில் மற்றும் அவரது மனைவிக்கு உரிய இழப்பீடு வழங்கவும், பூலாங்குறிச்சி காவல்நிலையத்தில் உள்ள இந்த வழக்கை மாவட்ட குற்றப் பிரிவின் விசாரணைக்கு மாற்றவும், உத்தரவிட வேண்டும்” என கூறியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சத்யநாராயணன், ராஜமாணிக்கம் அமர்வு, இந்த வழக்கின் தற்போதைய நிலை குறித்த அறிக்கையை அரசுத் தரப்பில் தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை செப்டம்பர் 22ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Views: - 9

0

0