கடைகளுக்கு வாடகை கட்டுவதில் விலக்கு அளிக்க கோரிய வழக்கு: மாநகராட்சி ஆணையர் பதிலளிக்க உத்தரவு…
18 August 2020, 8:20 pmமதுரை: மதுரை எம்.ஜி.ஆர் பேருந்து நிலையத்தில் உள்ள கடைகளுக்கு வாடகை கட்டுவதில் விலக்கு அளிக்க கோரிய வழக்கில் மதுரை மாநகராட்சி ஆணையர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரை எம்.ஜி.ஆர். பேருந்து நிலையத்தில் வாடகை கடை பணியாளர் சங்க தலைவர் ஜாகிர் ஹுசைன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். அதில் கூறியிருப்பதாவது:- கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா தொற்று காரணமாக இந்திய முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.மதுரை எம்.ஜி. ஆர் பேருந்து நிலையத்தில் சுமார் 185 கடைகள் உள்ளது. இந்த கடைகளுக்கு மதுரை மாநகராட்சி வாடகை வசூல் செய்து வருகிறது.
தற்போது நாடு முழுவதும் கொரோனா தொற்று காரணமாக பேருந்து இயக்கவில்லை. எனவே எம்.ஜி.ஆர் பேருந்து நிலையத்தில் அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளது. இதனால் எங்கள் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் எங்களால் கடைகளுக்கு வாடகை கட்ட முடியாத சூழல் உள்ளது. எனவே எம்.ஜி.ஆர் பேருந்து நிலையத்தில் உள்ள கடைகளுக்கு வாடகை கட்டுவதில் விலக்கு அளிக்க கோரி உயர் அதிகாரிகளுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது.
ஆனால் எவ்வித பதிலும் இல்லை. எனவே எம்.ஜி.ஆர் பேருந்து நிலையத்தில் உள்ள கடைகளுக்கு வாடகை கட்டுவதில் விலக்கு அளிக்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.இந்த மனு நீதிபதி ஜி. ஆர்.சுவாமிநாதன் முன் விசாரணைக்கு வந்தது, அப்போது வழக்கு குறித்து மதுரை மாநகராட்சி ஆணையர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை 4 வாரங்களுக்கு ஒத்திவைத்தார்.