கொரோனா சிகிச்சைக்கு கட்டிய பணத்தை திருப்ப தர கோரி வழக்கு: பதிலளிக்க தமிழக அரசுக்கு நோட்டீஸ்

2 September 2020, 3:09 pm
Madurai HC- updatenews360
Quick Share

மதுரை: கொரோனா சிகிச்சைக்கு ரூ 8 இலட்சம் கட்டணம் கட்டிய பணத்தை திருப்ப தர கோரி வழக்கில் பதிலளிக்க தமிழக அரசுக்கும் மருத்துவமனை நிர்வாகத்திற்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரை ராஜாமில் பகுதியைச் சேர்ந்த நேரு உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார்.
அதில், “நானும் எனது மனைவியும் காய்ச்சல் மற்றும் தலைவலி காரணமாக மதுரை NTC மருத்துவமனையில் டாக்டர் ராஜ்குமார் என்பவரிடம் சிகிச்சைக்காக சென்றோம். ஜூலை 7ஆம் தேதி சிகிச்சைக்காக சென்ற நிலையில், இருவருக்கும் கொரோனா நோய்க்கான அறிகுறிகள் இருப்பதால், சிகிச்சைக்காக முன்பணமாக 8 லட்ச ரூபாயை செலுத்த கூறினர்.

கொரோனா நோய்த்தொற்றின் மீதான அச்சம் காரணமாக நாங்களும் செலுத்தினோம். கொரோனோ பரிசோதனை முடிவில் கொரோனா நோய்த்தொற்று இல்லை என முடிவு வந்தது. அதைத்தொடர்ந்து முன்பணமாக செலுத்திய தொகையை கொடுக்குமாறு கேட்டோம். ஆனால் மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் ஒரு லட்சத்து 5 ஆயிரம் ரூபாய் மட்டும் வழங்கப்பட்டது. முன்பணமாக செலுத்திய தொகையை வழங்க கோரி பலமுறை முறையிட்டும் இதுவரை மருத்துவமனை நிர்வாகம், பணத்தை திரும்ப வழங்கவில்லை. இதுதொடர்பாக நடவடிக்கை கோரி அதிகாரிகளிடம் முறையிட்டும் எவ்வித நடவடிக்கையும் இல்லை.

ஆகவே, மதுரை வைத்தியநாதபுரம் பகுதியில் உள்ள NTC மருத்துவமனையின் மருத்துவர் ராஜ்குமார் மீது உரிய நடவடிக்கை எடுப்பதோடு முன்பணமாக செலுத்திய தொகையை மீண்டும் வழங்க உத்தரவிட வேண்டும்” என கூறியிருந்தார்.இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் இதுகுறித்து தமிழக பொது சுகாதாரத் துறையின் முதன்மைச் செயலர், மதுரை மாவட்ட ஆட்சியர் , மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை செப்டம்பர் 21-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

Views: - 6

0

0