டாஸ்மாக் ஊழியர்களின் ஓய்வு வயதை உயர்த்த கோரிய வழக்கு: டாஸ்மாக் நிறுவனம் பரிசீலிக்க உத்தரவு…
15 September 2020, 3:49 pmமதுரை: டாஸ்மாக் ஊழியர்களின் ஓய்வு வயதை 58-ல் இருந்து 59- ஆக உயர்த்த கோரிய வழக்கில் டாஸ்மாக்கில் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்கள் மற்றும் தற்காலிக ஊழியர்களின் அதிகபட்ச வயது வரம்பை 58-ல் இருந்து 59 ஆக உயர்த்த டாஸ்மாக் நிறுவனம் பரிசீலிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரையைச் சேர்ந்த டாஸ்மாக் ஊழியர்கள் விஸ்வநாதன், ராமகிருஷ்ணன் ஆகியோர், தமிழகத்தில் அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை 58-ல் இருந்து 59- ஆக உயர்த்தி பிறப்பிக்கப்பட்டுள்ள அரசாணை அடிப்படையில் தங்களின் ஓய்வு வயதை நீட்டிக்கக்கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு நீதிபதி சுரேஷ்குமார் முன்பாக விசாரணைக்கு வந்தது. டாஸ்மாக் தரப்பு வழக்கறிஞர் வாதிடுகையில், டாஸ்மாக்கில் நிரந்தர பணியாளர்கள் ஒரு பிரிவாகவும், தொகுப்பூதியம் பெறும் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் தற்காலிக ஊழியர்கள் மற்றொரு பிரிவாகவும் உள்ளனர்.
இந்த சலுகையை ஒப்பந்த ஊழியர்கள் கோர முடியாது. பணி விதிகள்படி ஒப்பந்த பணியாளர்கள் எப்போது வேண்டுமானாலும் பணிலிருந்து நீக்கலாம்” என்றார். இதையடுத்து நீதிபதி,” டாஸ்மாக்கில் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்கள் மற்றும் தற்காலிக ஊழியர்களின் அதிகபட்ச வயது வரம்பை 58-ல் இருந்து 59 ஆக உயர்த்த டாஸ்மாக் நிறுவனம் பரிசீலிக்க வேண்டும். வயது வரம்பு உயர்த்துவதை, அந்த வயது வரை தங்களுக்கு கட்டாயம் பணி வழங்க வேண்டும் என்பதற்கான உரிமையாக கருத முடியாது. டாஸ்மாக்கில் 58 வயது முடிந்தவர்களுக்கு தேவைக்கு ஏற்ப 59 வயது வரை பணி நீட்டிப்பு வழங்கும் வகையில் ஒப்பந்தத்தை புதுப்பிக்க வேண்டும்” என உத்தரவிட்டுள்ளார்.