மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட முறை கேடுகள் குறித்து சி.பி.ஐ. விசாரிக்க கோரிய வழக்கு: மத்திய மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு…

4 September 2020, 7:54 pm
Quick Share

மதுரை: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் வழங்கப்படும் வேலைகளில் நடைபெறும் முறை கேடுகள் குறித்து சி.பி.ஐ. விசாரிக்க கோரிய வழக்கில் மத்திய மாநில அரசுகள் பதிலளிக்க உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தர விட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை யூனியன், குகன் பாறையை சேர்ந்த தாமரைச் செல்வன் உயர் நீதி மன்ற மதுரைக்கிளையில் மனுத் தாக்கல் செய்துள்ளார். அதில்,” எங்கள் ஊரான குகன் பாறையில், 424 குடியிருப்புகள் உள்ளன. இதில் ஏராளமானோர், ஏழை எளிய மக்கள் குடியிருந்து வருகின்றனர். எங்கள் ஊரான குகன் பாறையின் தலைவராக, கே.வி.கே.ராஜு, என்பவர் இருந்து வருகிறார். தற்போது, அவர் தலைமையில் தேசிய ஊரகவேலை உறுதி திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் வேலைகளுக்காக, வேலை அடையாள அட்டை வழங்கப்பட்டு வருகிறது.

இதில் எங்கள் ஊரை சேராதவர்கள், மற்றும் இறந்து போனவர்கள் என பலருக்கும் அடையாள அட்டைகள் வழங்கி, அரசு வழங்கி வரும் நிதியில் முறைகேடுகள் செய்து வருகின்றனர். அதே போல், பணிகளுக்குரிய வேலை விண்ணப்பம் வழங்கும் பணி மற்றும் வேலை அடையாள அட்டை வழங்கும் பணிகளுக்கும், தகுதியில்லாதவர்களை நியமித்து, அதன் மூலம் முறைகேடுகள் நடைபெற்று வருகிறது. இது போன்ற முறைகேடுகள் மூலம் கோடிக்கணக்கான ரூபாய் அரசின் பணத்தை சிலர் எடுத்து வருகின்றனர். எனவே இதுகுறித்து அதிகாரிகளிடம், புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை.

எனவே இது குறித்து சி.பி.ஐ. போன்ற அமைப்புகள் விசாரித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் தெரிவித்துள்ளார். இந்த மனு நீதிபதிகள் சத்தியநாராயணன், ராஜமாணிக்கம் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. இதனை விசாரித்த நீதிபதிகள் இது குறித்து மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை 4 வாரங்களுக்கு ஒத்தி வைத்துள்ளனர்.

Views: - 0

0

0