போலி தங்க நகைகளைக் கொடுத்து நூதன முறையில் பெண்ணிடம் மோசடி: சிசிடிவி காட்சிகள் வெளியீடு..

Author: kavin kumar
17 August 2021, 10:42 pm
Quick Share

சென்னை: சென்னையில் அடுத்தடுத்த இரண்டு நாட்களில் வெவ்வேறு இடங்களில் போலி தங்க நகைகளைக் கொடுத்து நூதன முறையில் பெண்ணிடம் மோசடி செய்த கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

சென்னை கொளத்தூர் பகுதியை சேர்ந்தவர் சரிதா.இவர் கொளத்தூர் ஹரிதாஸ் மெயின் ரோடு பகுதியில் துணி கடை வைத்துள்ளார். இவரது துணிக் கடைக்கு கடந்த 9ஆம் தேதி இரண்டு பேர் வந்து துணி எடுத்து உள்ளனர். அதன் பிறகு மீண்டும் மறுநாள் வந்து மீண்டும் துணி எடுத்து விட்டு தங்களிடம் சில தங்க குண்டு மணிகள் இருப்பதாகவும் அவசரத் தேவைக்காக அதை விற்று தரும்படியும் கூறியுள்ளனர். குறைந்த அளவு பணம் கொடுத்தால் போதும் என்று கூறி தங்க குண்டு மணிகளைக் கொடுத்து விட்டு சென்றுள்ளனர் சரிதா அதைக் கொண்டு சென்று கடையில் காண்பித்த போது அது ஒரிஜினல் தங்கம் என்பது தெரிய வந்தது.

இதனை அடுத்து மீண்டும் சரிதாவை தொடர்பு கொண்ட அதே இரண்டு பேர் அவசர தேவைக்காக எங்களுக்கு பணம் தேவைப்படுவதாகவும் அதனால் 20 லட்சம் மதிப்புள்ள தங்க குண்டு மணிகள் எங்களிடம் இருப்பதாகவும் அதை வைத்துக் கொண்டு 10 லட்சம் ரூபாய் தர முடியுமா என கேட்டனர்.அதற்கு சரிதா எங்களிடம் அவ்வளவு பணம் இல்லை என்று கூறி உள்ளார்.உங்களால் எவ்வளவு பணம் தர முடியுமோ அதைத் தாருங்கள் பின்னர் மீதி பணத்தை பெற்றுக் கொள்கிறோம் என்று அந்த மோசடி கும்பல் கூறியுள்ளது. இதனை நம்பிய சரிதா தான் வைத்திருந்த நகைகளை தனியார்  அடமானம் வைக்கும் நிறுவனத்தில் அடமானம் வைத்து 4 லட்சத்து 74 ஆயிரம் ரூபாய் தயார் செய்துள்ளார்.

மீண்டும் சரிதாவை தொடர்பு கொண்ட மோசடி நபர்கள் பணத்தை பெரம்பூர் ரயில் நிலையம் எதிரே கொண்டு வருமாறு கூறியுள்ளார். சரிதாவும் அதை தம்பி அந்த பணத்தைக் கொண்டு சென்றுள்ளார். அப்போது சரிதா அணிந்திருந்த 3 சவரன் தங்க வளையல்களை கழட்டி அந்த கும்பலிடம் கொடுத்து விட்டு தான் கொண்டு சென்ற பணத்தையும் கொடுத்துள்ளார். பிறகு அந்த கும்பல் தாங்கள் வைத்திருந்த தங்க குண்டு மணிகளை  சரிதாவிடம் கொடுத்துள்ளனர். சரிதா அதை வீட்டுக்கு எடுத்து வந்து அருகில் உள்ள நகைக் கடைக்குச் சென்று காண்பித்த போது அவை அனைத்தும் பித்தளை என்பது தெரிய வந்தது.

இதனை அடுத்து தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த சரிதா தனது கணவரிடம் கூறி அழுதுள்ளார். பிறகு இதே போன்ற சம்பவம் அயனாவரம் பகுதியில் நடைபெற்றதை தொலைக்காட்சி மூலம் அறிந்த சரிதா செம்பியம் காவல் நிலையத்தில்  புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் சரிதா கடையில் இருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து கடைக்கு வந்த நபர்கள் குறித்து விசாரணை செய்து வருகின்றனர். இதே போன்று தங்க குண்டு மணி கொடுத்து ஏமாற்றிய சம்பவம் அயனாவரம் பகுதியில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 202

0

0