பள்ளி மாணவி காரில் கடத்தல்: செங்கல்பட்டில் இறக்கிவிட்டுவிட்டு தலைமறைவான மர்ம நபர்கள்
28 August 2020, 6:54 pmசெங்கல்பட்டு: பெங்களூர் நகரத்தில் பத்தாம் வகுப்பு பள்ளி மாணவியை காரில் கடத்தி கொண்டு வந்து செங்கல்பட்டு அருகே இறக்கிவிட்டுவிட்டு மர்ம நபர்கள் தலைமறைவான சம்பவம் குறித்து மகளிர் காவல் துறையினர் மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
செங்கல்பட்டு அருகே திம்மாவரம் பகுதியில் 15 வயதுடைய ரக்சிதா என்ற பள்ளி மாணவி தனியாக நின்று அழுது கொண்டிருந்த கவனித்த அப்பகுதி ஆட்டோ ஓட்டுனர்கள் மகளிர் காவல்நிலையத்திற்கு தகவல் அளித்தனர். அதன்பேரில் மகளிர் காவல் துறையினர் அந்த பெண்ணை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர். விசாரணையில் அந்த பெண் கூறுகையில், “பெங்களூர் தெற்கு நகரத்தில் ஜேபி நகர் பகுதியில் வசிப்பதாகவும், அன்புள்ள ஆர்வி பள்ளியில் பத்தாம் வகுப்பு படிப்பதாகவும் , நேற்று காலை இரண்டு பேர் வந்து தன்னுடைய அப்பாவுக்கு விபத்து ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தன்னை அழைத்து வர கூறினார் என கூறியதால் அதை நம்பி அவர்கள் கொண்டு வந்த காரில் வந்ததாகவும், பின்னர்தான் என்னை காரில் கடத்தி கொண்டு செங்கல்பட்டு அருகே கீழே தள்ளிவிட்டு அவர்கள் இருவரும் தப்பியதாகவும் அந்தப் காவலர்களிடம் கூறினார். அதன்பேரில் மகளிர் காவல்துறையினர் அந்த சிறுமியை மீட்டு குழந்தைகள் நல குழும உறுப்பினர்கள் மற்றும் ரக்சிதாவின் தந்தை கணேஷ் ஆகியோர்களுக்கு தகவல் அளித்துவிட்டு சைல்டு ஹெல்ப்லைன் அலுவலர்களிடம் ரக்சிதாவை ஒப்படைத்தனர்.
ரக்சிதாவின் தந்தை கணேஷ் மற்றும் உறவினர்கள் பெங்களூரில் இருந்து கார் எடுத்துக்கொண்டு குழந்தைகள் நல குடும்பம் தலைவரை சந்தித்து மகளை தங்களுடன் அனுப்புமாறு வேண்டினர். இதையடுத்து மாவட்ட குழந்தைகள் நல குழும தலைவர் ராமச்சந்திரன் , குடும்ப உறுப்பினர் சக்திவேல் முன்னிலையில் சைல்டு ஹெல்ப் லைன் அலுவலர்கள் ரக்சிதாவை தந்தை கணேஷிடம் ஒப்படைத்தனர்.
ரக்சிதா ஆள் அடையாளம் தெரியாமல் மாற்றி கடத்தப்பட்டாரா? அல்லது வேறு ஏதாவது காரணமா என காவல்துறையினர் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றார்கள். காரில் கடத்தி வரும்போது எந்த விதமான பாலியல் தொந்தரவும் அவர்கள் அளிக்கவில்லை என சிறுமி கூறியதாலும் சம்பவம் நடந்தது பெங்களூரு என்பதாலும் செங்கல்பட்டில் வழக்கு பதிவு செய்யவில்லை.