பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளின் செயல்பாடு : உயர் கல்வித்துறை செயலாளர் பதிலளிக்க உத்தரவு!!
18 August 2020, 2:52 pmசென்னை : தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்கள் 5 ஆண்டுக்கு ஒரு முறை கல்லூரிகள் செயல்பாடு குறித்து அறிக்கையை உயர்கல்வித் துறையில் தாக்கல் செய்ய உத்தரவிடக் கோரிய வழக்கில் உயர்கல்வித் துறை மற்றும் பல்கலைக்கழகங்கள் பதிலளிக்க உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
நாகர்கோவிலை சேர்ந்த ஆனந்த கிருஷ்ணன் உயர் நீதி மன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
அதில் நான் 34 ஆண்டுகள் கல்லூரியில் பேராசிரியராக இருந்து ஓய்வு பெற்றுள்ளேன். செனட், மற்றும் சிண்டிகேட் அமைப்புகளிலும் பங்கேற்றுள்ளன்.
தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்கள், தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள கல்லூரிகள், மற்றும் உறுப்புக் கல்லூரிகள் போன்ற வற்றின் செயல்பாடுகள் குறித்து, 5 ஆண்டுக்கு ஒரு முறை, கல்லூரிகளின் நெறிமுறைகள் மற்றும் செயல்பாடுகள் குறித்து அறிக்கைகள் தயார் செய்து, அதனை உயர் கல்வித்துறை செயலாளருக்கு சமர்ப்பிக்க வேண்டும். அதனை சட்டமன்றத்தில் வைத்து ஆய்வு நடத்தி கல்லூரிகளுக்கு நெறிமுறைகளை வழங்க வேண்டும்.
ஆனால் கடந்த சில ஆண்டுகளாக எந்தவொரு பல்கலைக்கழகமும், இது போன்ற அறிக்கைகளை வழங்குவதே இல்லை. எனவே அனைத்து பல்கலைக்கழகங்களும் வழிகாட்டுதல் நெறிமுறைகளை தயார் செய்து உயர் கல்வித் துறைக்கு வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் தெரிவித்துள்ளார்.
இந்த மனு நீதிபதிகள் சத்தியநாராயணன், ராஜமாணிக்கம் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் இது குறித்து உயர் கல்வித்துறை செயலாளர் மற்றும் பல்கலைக்கழகங்கள் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை செப்டம்பர் 10ம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளனர்.