அரசு மருத்துவமனையில் 224 குழந்தைகளுக்கு ‘காக்லியர் இம்ப்ளான்ட்’ சிகிச்சை – டீன் தகவல்

3 March 2021, 4:40 pm
Quick Share

கோவை: உலக செவித்திறன் தினத்தை முன்னிட்டு கோவை அரசு மருத்துவமனையில் இன்று ‘காக்லியர் இம்ப்ளான்ட்’ கருவி பொருத்தப்பட்ட குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

உலக செவித்திறன் தினம் என்பது ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் 3ம் தேதி உலக சுகாதார அமைப்பின் காது கேளாமை தடுப்பு அலுவலக்கத்தால் நடத்தப்படும் நிகழ்வாக உள்ளது. அதன்படி, இந்தாண்டு விழிப்புணர்வு பிரச்சார கருவாக “அனைவருக்கும் செவித்திறன் பராமரிப்பு” என்ற தலைப்பில் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. இதன் ஒரு பகுதியாக கோவை அரசு மருத்துவமனையில் உலக செவித்திறன் தினத்தை முன்னிட்டு காதுகேளாமைக்கு பொருத்தப்படும் ‘காக்லியர் இம்ப்ளான்ட்’ கருவிகளை பொருத்திய குழந்தைகளின் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. அதோடு அரசு மருத்துவமனை சார்பில் பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன.

இதுகுறித்து அரசு மருத்துவமனை டீன் நிர்மலா கூறுகையில், “இந்தியாவில் பிறக்கும் ஆயிரம் குழந்தைகளில் 2 குழந்தைகளுக்கு செவித்திறன் பாதிப்பு உள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை 1000 பேரில் 6 பேர் என்பதும் குறிப்பிடத்தக்கது. காதுகேளாமை குறைபாட்டை கண்டறியும் நவீன மருத்துவ சாதனங்கள் அனைத்தும் அரசு மருத்துவமனையில் உள்ளது. இங்கு காது, மூக்கு, தொண்டை துறையில் புறநோயாளி பிரிவில் அனைத்து விதமான பிரச்சினைகளுக்கும் உரிய பரிசோதனைகள் செய்து அதற்குரிய சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. அறுவை சிகிச்சை தேவைப்படும் அனைவருக்கும் உயர் ரக அறுவை சிகிச்சை கருவிகள் மூலம் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இதுவரை அரசு மருத்துவமனையில் 6 வயதுக்கு கீழ் உள்ள 224 குழந்தைகளுக்கு “காக்லியர் இம்ப்ளான்ட்’ கருவி பொருத்தி அதற்கான ஒரு வருட செவிவழி பேச்சுப் பயிற்சி கொடுத்து, அப்பிள்ளைகளுக்கு எதிர்காலம் பிரகாசமாக இருக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.” என்றார். இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் காது மூக்கு தொண்டை பிரிவு துறை தலைவர் அலி சுல்தான், இணை பேராசிரியர் சரவணன், உதவி பேராசிரியர்கள், முதுநிலை மருத்துவர் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Views: - 7

0

0