கோவை விழா : வண்ண விளக்குகளால் ஜொலிக்கும் கோவை..!

Author: Udayaraman
5 January 2021, 10:04 pm
Quick Share

கோவை: கோவை விழாவை முன்னிட்டு, மாநகரின் வெவேறு பகுதிகள் தேசியக்கொடியின் வண்ணத்தில் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

கோவை மாவட்ட மக்களையும் மகிழ்விக்கும் விதமாக ஆண்டுதோறும் ஜனவரி மாதம் முதல் வாரம் கோவை விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த விழாவில் பண்பாடு போற்றும் பாரம்பரிய நிகழ்ச்சிகள், ஓவியச்சந்தைகள், கலை நிகழ்ச்சிகள் மற்றும் மாணவர்களுக்கு இடையேயான போட்டிகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுவது வழக்கம்.

அந்த வகையில் 13வது கோவை விழா கடந்த 2-ஆம் தேதி தொடங்கியது. வரும் பத்தாம் தேதி வரை நடைபெற உள்ள இந்த விழாவை அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி மற்றும் விஜயபாஸ்கர் ஆகியோர் துவக்கி வைத்தனர். கொரோனா காலத்தில் களப்பணியாற்றிய இஎஸ்ஐ மருத்துவமனை மற்றும் அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்கள் செவிலியர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்கள் மீது ஹெலிகாப்டர் மூலம் வானில் இருந்து மலர் தூவப்பட்ட நிகழ்ச்சியோடு கோவை விழா தொடங்கப்பட்டது.

விழாவின் ஒரு பகுதியாக கோவையில் மூன்று பகுதிகள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. அதன்படி கோவையின் பிரதான அடையாளமாக உள்ள மணிக்கூண்டு பகுதி தேசியக்கொடியின் வண்ணம் போல் விளக்குகளால் ஒளிரூட்டப்பட்டுள்ளது. இதேபோல பிஎஸ்ஜி வளாகத்தின் பழைய கட்டிடமும், லட்சுமி மில் நிறுவனத்தின் பழைய நுழைவு வாயிலும் மூவர்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது காண்போரை மகிழ்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

இதுகுறித்து கோவை விழா நிர்வாகிகள் கூறியதாவது:

கடந்த 8 மாதங்களாக வீடுகளுக்குள்ளேயே மக்கள் முடங்கிக்கிடந்த சூழலில் தற்போது தான் வெளியே வர துவங்கியுள்ளனர். அப்படி வெளியே வரும் மக்களை மகிழ்விக்கும் விதமாக இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது சோதனை முயற்சியாக இந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு ஒவ்வொரு வீடுகளிலும் இதை மக்களே செய்ய நாங்கள் கோரிக்கை வைக்க உள்ளோம்.

அதோடு ஜெர்மென் நிறுவனத்துடன் இணைந்து மெய்நிகர் வடிவில் ஓவியசந்தை தற்போது இணையம் வாயிலாக நடைபெற்று வருகிறது. மொத்தம் 61 கலைஞர்கள் 610 ஓவியங்களை காட்சிப்படுத்தியுள்ளனர். இந்த ஓவியங்கள் அனைத்தும் http://coimbatorevizha.com/ என்ற இணையதளத்தில் உள்ளன. மெய்நிகர் வடிவில் ஓவியத்தை பார்க்கும் மக்கள் அதனை வாங்க வேண்டும் என்றால் ஓவியரை தொடர்பு கொள்ள முடியும். இதுதவிர பல்வேறு நிகழ்ச்சிகள் வரும் 10ம் தேதி வரை நடைபெற உள்ளன. என்றனர்

Views: - 68

0

0