தீபாவளிக்கு ஊருக்கு சென்ற தொழிலாளர்கள் பணிக்கு திரும்பாததால் முடங்கிப்போன கோவை!

18 November 2020, 7:06 pm
Quick Share

கோவை: தீபாவளி பண்டிகை முடிந்தும் தென்மாவட்ட தொழிலாளர்கள் பணிக்கு திரும்பாததால் கோவை மாவட்டத்தில் சிறு,குறுந்தொழில்கள் இயல்பு நிலைக்கு திரும்பாமல் முடங்கியுள்ளன.

தொழில்நகரான கோவையில் 30,000 ரூபாய்க்கும் மேற்பட்ட சிறு, குறு தொழில் கூடங்கள் இயங்கி வருகின்றன. இவற்றில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களில் பெரும்பாலான தொழிலாளர்கள் தென்மாவட்டத்தை சேர்ந்தவர்கள்.இந்நிலையில் தீபாவளி பண்டிகைக்காக சொந்த ஊருக்கு சென்ற தொழிலாளர்கள் இது வரை பணிக்கு திரும்பவில்லை. இதன் காரணமாக சிறு, குறு தொழில் கூடங்களில் இன்னும் முழு அளவில் உற்பத்தி துவங்க முடியாத நிலையான நிலவி வருகின்றது. வழக்கமாக பண்டிகை காலங்களில் ஊருக்கு செல்லும் தொழிலாளர்கள் ஒரு வார காலத்திற்கு பணிக்கு வர மாட்டார்கள் என தெரிவிக்கும் தொழில் முனைவோர் ,

கொரோனா காலத்தில் நெருக்கடி இருந்தாலும் தற்போது ஆர்டர்கள் ஒரளவு வந்திருப்பதாகவும், ஆனால் ஊருக்கு போன தொழிலாளர் வராததால் பணிகள் முழுவீச்சில் துவங்க வில்லை எனவும் தொழில் முனைவோர் தெரிவிக்கின்றனர்.தீபாவளிக்கு பின் வரும் வாரம் முழுவதும் தொழிலாளர்கள் பணிக்கு வரமாட்டார்கள் என்பதால் பல நிறுவனங்கள் இன்னும் திறக்கவில்லை எனவும், ஒரு சில சிறு, குறு தொழில் கூடங்கள் மட்டும் ஒரு சில தொழிலாளர்களை கொண்டு இயங்கி வருவதாகவும் தமிழ்நாடு குறுந்தொழில் முனைவோர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் வெளியூர் போன தொழிலாளர்கள் திரும்பி வரும்போது ஏற்கனவே பணிபுரிந்த அதே நிறுவனத்திற்கு பணிக்கு வராமல் வேறு நிறுவனத்திற்கு இடமாற்றமாவதும் இருக்கும் எனவும், எனவே இந்த வாரம் முழுமையும் சிறு,குறு தொழில்கள் முழுவீச்சில் இருக்காது எனவும் தொழில்துறையினர் தெரிவித்தனர். ஏற்கனவே கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வட மாநில தொழிலாளர்கள் சொந்த ஊர் ல் சென்றுவிட்டு மீண்டும் கோவைக்கு திரும்பாத நிலையில், தென் மாவட்ட தொழிலாளர்கள் கோவைக்கு வராததால் பணிகள் பெரும்பாலும் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.