சீட்டு நடத்தி பொதுமக்களிடம் பல கோடி ரூபாய் மோசடி: தலைமறைவான நகை கடை அதிபர் கைது

13 January 2021, 10:54 pm
Quick Share

திருப்பூர்: தாராபுரத்தில் பிரபல நகைக்கடையில் சிறு சேமிப்பு திட்ட சீட்டு நடத்தி பொதுமக்களிடம் இருந்து பெற்ற பல கோடி ரூபாயுடன் நகை கடை அதிபர் தலைமறைவான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பொள்ளாச்சி சாலையில் எஸ். வி. ஆர் என்ற எஸ் . வெங்கட்ராம செட்டியார் நகை மாளிகை உள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் திரைப்பட நடிகர் நடிகைகளால் திறப்புவிழா செய்யப்பட்டு, ஆடம்பரமாக செயல்பட்டு வந்த இந்த நகை மாளிகையில் மாதாந்திர தங்க நகைசிறு சேமிப்பு திட்டத்தின் கீழ் தாராபுரம் மற்றும் சுற்றுவட்டார கிராம பகுதி சார்ந்த ஏராளமான பொதுமக்கள் வாடிக்கையாளர்கள் உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டு, அவர்களுக்கு ஆண்டுதோறும் நடைபெறும் குலுக்களில் கார், இருசக்கர வாகனங்கள், தங்க நகைகள் என கவர்ச்சியான பரிசுப் பொருட்களை திரைப்பட நடிகைகளைக் கொண்டு குலுக்கல் நடத்தி வழங்கி வந்தனர்.

நகை மாளிகையின் உரிமையாளர் தாராபுரம் நகரின் பிரபல குடும்பத்தைச் சேர்ந்த நபர் என்பதால் சுற்றுவட்டார பகுதி முழுவதும் உள்ள கிராம மக்கள் ஏராளமான அளவில் கவர்ச்சிகரமான விளம்பரத்தால் கவரப்பட்டு தங்க நகை சேமிப்பு திட்டத்தின் ரூ 500 முதல் ஐந்தாயிரம் ரூபாய் வரை மாதாந்திர தவணைகளாக செலுத்தி உறுப்பினர்களாக சேர்ந்தனர். இதுதவிர தாராபுரம் நகரின் பல அரசியல் பிரபலங்கள் தொழிலதிபர்கள் நகை கடை அதிபர் ஹரியை நம்பி பல கோடி ரூபாயை கடையில் முதலீடு செய்தும், வட்டிக்கு கொடுத்தும் உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் கோவையில் செயல்பட்டு வரும் பல்வேறு பிரபல நகைக் கடைகளில் இருந்து சுமார் 20 கோடி ரூபாய் அளவில் தங்க கட்டிகளையும் கடனாக பெற்றிருந்தார் என்ற தகவல் கசிந்தது. இந்நிலையில் கடந்த 12 ஆம் தேதி முதல் நகை கடை முற்றிலும் அடைக்கப்பட்டு 2 நாட்கள் விடுமுறை என்ற அறிவிப்பு பலகை தொங்க விட்ட நிலையில் நகைக்கடை அதிபர் ஹரி தனது குடும்பத்தினருடன் தலைமறைவாகிவிட்டார். இதனால் சந்தேகமடைந்த தங்க நகை சேமிப்புத் திட்டத்தில் உறுப்பினராக சேர்ந்திருந்த கடையின் வாடிக்கையாளர்களுக்கு நகைக்கடை அதிபர் குடும்பத்துடன் தலைமறைவான தகவல் தெரியவந்ததை அடுத்து ஏராளமான பெண்கள் பொள்ளாச்சி சாலையில் உள்ள நகைக்கடை முன் குவிந்தனர்.

இந்நிலையில் தங்க நகைசிறுசேமிப்பு திட்டத்தில் உறுப்பினர்களாக சேர்ந்தவர்களும் நகைக்கடை அதிபரிடம் கோடிக்கணக்கான ரூபாய்களை வட்டிக்குக் கொடுத்த நபர்களும் திருப்பூர் மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறை ஆய்வாளரிடம் தொடர்ந்து புகார் அளித்து வந்தனர். 470 க்கும் மேற்பட்ட புகார்களை பெற்றுள்ள போலீசார் மாவட்ட குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் பழனியம்மாள் தலைமையில் தலைமறைவான நகைக்கடை அதிபர் ஹரியை தாராபுரம் பொள்ளாச்சி சாலையில் உள்ள அவரது நகைக் கடைக்கு அழைத்து வந்தனர். பல கோடி ரூபாயுடன் தலைமறைவான ஹரி போலீசாருடன் வந்ததை பற்றி தகவல் அறிந்த பொதுமக்களும் பணம் கொடுத்து பாதிக்கப்பட்டவர்களும் கடையின் முன் குவிந்தனர்.

இதனால் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது. நகைக்கடை அதிபருடன் கடைக்கு சென்ற போலீசார் கடைக்குள் ஆய்வு செய்து அங்கிருந்த சில முக்கிய ஆவணங்களை எடுத்துக்கொண்டு ஹரியையும், அழைத்துக் கொண்டு திரும்ப திருப்பூர் செல்ல முயன்றனர். அப்போது குறுக்கிட்ட பாதிக்கப்பட்ட பொதுமக்கள் ஹரியை கேவலமான வார்த்தைகளால் திட்டியதுடன் போலீசாரிடம் சரமாரியாக கேள்வி கேட்டனர். தங்களது பணம் எப்போது திரும்பக் கிடைக்கும், எங்களையெல்லாம் ஏமாற்றிய ஹரியைவிடுவித்து விடாதீர்கள் என கூச்சலிட்டனர். இதனைத் தொடர்ந்து ஹரியிடம் முறையான விசாரணை நடத்தி உரிய புகார்களை பெற்றபின் பணம் செலுத்தியவர்களுக்கு அவற்றைத் திருப்பித் தர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என ஹரியுடன் வந்த குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் பழனியம்மாள் தகவல் கூறியதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

Views: - 10

0

0