தருமபுரியில் 4 இடங்களில் புதிய தார்சாலைகள் அமைக்கும் பணிகள் தொடக்கம்

28 August 2020, 8:23 pm
Quick Share

தருமபுரி: பாப்பிரெட்டிப்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.8 கோடியே 54 லட்சத்து 58 ஆயிரம் மதிப்பீட்டில் 4 இடங்களில் புதிய தார்சாலைகள் அமைக்கும் பணிகளை உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தொடங்கி வைத்தார்.

தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.8 கோடியே 54 இலட்சத்து 58 ஆயிரம் மதிப்பீட்டில் மூக்காரெட்டிப்பட்டி, அ.பள்ளிப்பட்டி, வெங்கடசமுத்திரம், பொம்மிடி ஆகிய 4 இடங்களில் பாரத பிரதமரின் கிராம சாலைகள் திட்டத்தின் மூலம் புதிய தார்சாலைகள் அமைக்கும் பணிகளை உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் பூமிபூஜை செய்து தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் எஸ்.மலர்விழி தலைமை வகித்தார். பின்னர் இந்நிகழ்ச்சியில் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் பேசுகையில், “கொரானா தொற்று பாதிப்பு காரணத்தினால் தேர்வு எழுதும் சூழல் மாணவர்கள் மத்தியில் இல்லை. இதன் காரணமாக மாணவர்களின் நலன் கருதி கல்லூரி பருவத் தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

கல்லூரி படிப்பில் இளங்கலை பட்டப்படிப்பில் ஆறாவது பருவத் தேர்வு, முதுகலை பட்டப்படிப்பில் நான்காவது பருவத்தேர்வு, பொறியியல் பட்டப் படிப்பில் எட்டாவுது பருவத்தேர்வு இவை அனைத்தும் இறுதி தேர்வுகள் என்பதால் நீதிமன்ற உத்தரவுபடி தேர்வுகள் நடத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும். கல்லூரி மாணவர்களின் பெற்றோர்களின் பொருளாதார நிலையை எண்ணியும், ஓராண்டு கல்லூரி படிப்பை முடிக்கவில்லை என்றால் அடுத்த ஆண்டு படிப்பை மாணவர்கள் தொடர்வதில்லை என்ற காரணத்தினாலும் இறுதி பருவத்தேர்வு தவிர மற்ற தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

சென்ற ஆண்டைக் காட்டிலும் அரசு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் தொழில் வாய்ப்பை உருவாக்கும் வகையில் முதற்கட்டமாக 2,000 கோடி மதிப்பீட்டில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கப்பட உள்ளது. என்றார் அமைச்சர் அன்பழகன். இந்நிகழ்ச்சியில் சார் ஆட்சியர் பிரதாப், பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.