பெண் செவிலியரின் உடலை புதைக்க எதிர்ப்பு தெரிவித்த விவகாரம்: 6 பேர் மீது 6 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு…
4 August 2020, 4:34 pmராணிப்பேட்டை: கொரோனாவால் உயிரிழந்த பெண் செவிலியரின் உடலை புதைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்த விவகாரத்தில் 6 பேர் மீது 6 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்..
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அரசு மருத்துவமனையில் வேலை பார்த்து வந்த பெண் செவிலியர் கொரோனாவால் உயிரிழந்த நிலையில், அவரது உடலை புதைக்க அப்பகுவாசிகள் எதிர்ப்பு தெரிவித்த விவகாரத்தில் ராணிப்பேட்டை போலீசார் 6 பேர் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஆற்காடு அரசு மருத்துவமனை பெண் செவிலியர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சைக்காக வேலூர் சி.எம்.சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததை தொடர்ந்து நவல்பூர் பகுதியில் உள்ள கல்லறைத் தோட்டத்தில் அவரது உடலை புதைக்க அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் எதிர்ப்பு தெரிவித்த பொதுமக்களிடம் 2 மணி நேரத்திற்கும் மேலாக சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தி உடலை அடக்கம் செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக கிராம நிர்வாக அலுவலர் கார்த்திக் அளித்த புகாரின் பேரில் ராணிப்பேட்டை போலீசார் 6 பேர் மீது 143,188,294(B),270, 353, 369 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.