காந்தி மார்க்கெட்டை திறக்க நீதிமன்றம் அனுமதி: வியாபாரிகள் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

26 November 2020, 9:48 pm
Quick Share

திருச்சி: காந்தி மார்க்கெட்டை திறக்க நீதிமன்றம் அனுமதி வியாபாரிகள் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

கொரோனா வைரஸ் தாக்குதல் தடுப்பு நடவடிக்கையாக திருச்சி காந்தி மார்க்கெட் கடந்த மார்ச் மாதம் மூடப்பட்டது. இதைத் தொடர்ந்து திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கம், ஜோசப் கல்லூரி, எஸ்.ஐ.டி கல்லூரி வளாகம், மதுரம் மைதானம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தற்காலிக சந்தைகளாக செயல்பட்டு வருகிறது. இதற்கிடையில் திருச்சி மாவட்டம் மணிகண்டம் ஒன்றியம் கே.கள்ளிக்குடி கிராமத்தில் புதிதாக கட்டப்பட்டு இருந்த காய்கனி வணிக வளாகத்திற்கு காந்தி மார்க்கெட்டை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. ஆனால் வியாபாரிகள் அங்கு செல்ல மறுப்பு தெரிவித்து வந்தனர். இதுதொடர்பாக கிருஷ்ணமூர்த்தி என்பவர் மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

திருச்சி காந்தி மார்க்கெட் கள்ளிக்குடி வணிக வளாகத்திற்கு மாற்ற வேண்டும் என்று அவர் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் திருச்சி காந்தி மார்க்கெட் செயல்பட இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது. இதனால் ஏற்கனவே கரோனா தடுப்பு நடவடிக்கையாக மூடப்பட்டிருந்த காந்தி மார்க்கெட் திறக்கப்படவில்லை. ஊரடங்கு தளர்த்தப்பட்ட பின்னரும் காந்தி மார்க்கெட் பயன்பாட்டுக்கு வரவில்லை. இதை எதிர்த்து வியாபாரிகள் பல கட்ட போராட்டங்களை அறிவித்தனர். இந்நிலையில் நேற்று முதல் தற்காலிக சந்தைகளில் காய்கறி வியாபாரங்களை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் இன்று மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி இடைக்கால தடை உத்தரவை நீக்கி உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மாநில பொதுச் செயலாளர் கோவிந்தராஜூலு, காந்தி மார்க்கெட் வியாபாரிகள் சங்க தலைவர் கமலக்கண்ணன் மற்றும் நிர்வாகிகள் காந்தி மார்க்கெட் அருகே கூடினர். அவர்களுக்கு வியாபாரிகள் மாலை அணிவித்து பட்டாசுகளை வெடித்து வரவேற்பு அளித்தனர்.

இதைத்தொடர்ந்து அங்கு வந்த அமைச்சர் வெல்லமண்டி நடராஜனுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும் இரவோடு இரவாக காந்தி மார்க்கெட் தூய்மை செய்யும் பணி தொடங்கியுள்ளது. நாளை காலை 9.30 மணிக்கு காந்தி மார்க்கெட்டில் திறப்பு விழா நடைபெறுகிறது. காந்தி மார்க்கெட்டை திறக்க மதுரை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்ததை தொடர்ந்து வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Views: - 12

0

0