மாடுகளை திருடிய இருவர் கைது: கடத்தலுக்கு பயன்படுத்திய சரக்கு வாகனம் பறிமுதல்

5 September 2020, 10:36 pm
Quick Share

நாகப்பட்டினம்: நல்லத்துக்குடி பகுதியில் மாடுகளை திருடிய இருவரை மயிலாடுதுறை போலீஸார் கைது செய்தனர்

மயிலாடுதுறை அருகேயுள்ள நல்லத்துக்குடி கிராமத்தைச் சேர்ந்த கண்ணன் மனைவி மீனாட்சி(32) என்பவர் தனது வீட்டின் பின்புறம் உள்ள கொட்டகையில் கட்டி வைத்திருந்த பசு மாடு கடந்த ஆகஸ்ட் 25-ஆம் தேதி அதிகாலை முதல் காணாமல் போனது. இதேபோல், அதே பகுதியைச் சேர்ந்த அர்ஜுனன்(65) என்பவருக்கு சொந்தமான பசுமாடும் காணாமல் போனது. இதுகுறித்து, அவர்கள் மயிலாடுதுறை போலீஸாரிடம் புகார் அளித்திருந்தனர். இதையடுத்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா, காவல் துணை கண்காணிப்பாளர் கே.அண்ணாதுரை ஆகியோர் உத்தரவின்பேரில் தனிப்படை போலீஸார் விசாரணை மேற்கொண்டு,

மாடு திருட்டில் ஈடுபட்ட நல்லத்துக்குடி சிவன் நகரைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் மகன் மணிகண்டன், நீடாமங்கலம் கடம்பூர் பகுதியைச் சேர்ந்த ஜெயசீலன் மகன் வசந்தகுமார் ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து மீனாட்சிக்கு சொந்தமான பசுமாட்டினை பறிமுதல் செய்து உரியவரிடம் ஒப்படைத்தனர். அர்ஜூனனுக்கு சொந்தமான பசுமாட்டினை விற்பனை செய்திருந்தது தெரியவந்ததால், மாடு விற்று வைத்திருந்த தொகை ரூ.15 ஆயிரத்தை அர்ஜூனனிடம் ஒப்படைத்தனர். மேலும், மாடு கடத்தலுக்கு பயன்படுத்திய சரக்கு வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து மாடு கடத்திய இருவரின் மீது வழக்குப்பதிவு செய்து சிறையிலடைத்தனர்.

Views: - 6

0

0