ஆட்டோ டிரைவர் கல்லால் அடித்துக் கொலை: திருக்கோவிலூர் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் இருவர் சரண்

3 March 2021, 6:25 pm
Quick Share

கடலூர்: கடலூரில் ஆட்டோ டிரைவர் கல்லால் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் இருவர் திருக்கோவிலூர் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் இன்று சரண் அடைந்தனர்.

கடலூர் எஸ்.என்.சாவடி மேட்டுத்தெருவை சேர்ந்தவர் மகாலிங்கம். இவருடைய மகன் பிரபு . இவர் கடலூர் பஸ் நிலையத்தில் ஆட்டோ ஓட்டி வந்தாா். இவருக்கு திருமணமாகி மஞ்சு என்கிற மனைவியும், ஒரு ஆண், ஒரு பெண் குழந்தையும் உள்ளனர். இந்நிலையில் பிரபுக்கும், அதே பகுதியை சேர்ந்த கஞ்சா வியாபாரி ஒருவருக்கும் முன்விரோத தகராறு இருந்து வந்தது.இந்த நிலையில் திங்கள் கிழமை 2 பேரும் எஸ்.என்.சாவடி கார் ஒர்க்‌ஷாப் அருகே நின்று குடிபோதையில் பேசிக்கொண்டிருந்ததாக தெரிகிறது. இதில் ஒருவருக்கொருவர் வாய்த்தகராறு ஏற்பட்டது.

இதனால் ஆத்திரமடைந்த கஞ்சா வியாபாரி திடீரென கீழே கிடந்த கருங்கல்லை எடுத்து, பிரபுவை தாக்கினார்.இந்த தாக்குதலில் அவர் கீழே விழுந்தார். உடன் பக்கத்தில் நின்ற 2 பேரை கஞ்சா வியாபாரி அழைத்தார். அவர்களும் ஓடி வந்து, கீழே கிடந்த பிரபுவை கல்லால் தாக்கினர். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். இதை பார்த்ததும் அக்கம், பக்கத்தினர் ஓடி வந்தனர். அதற்குள் அவர்கள் 3 பேரும் தப்பி ஓடி விட்டனர். இதற்கிடையில் ரத்த வெள்ளத்தில் கிடந்த பிரபுவை அக்கம், பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் பிரபு ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இது பற்றி தகவல் அறிந்ததும் கடலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சாந்தி மற்றும் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தி வருவதோடு, பிரபுவை கல்லால் தாக்கி கொலை செய்து விட்டு தப்பி ஓடிய கஞ்சா வியாபாரி உள்பட 3 பேரையும் வலைவீசி தேடி வந்தனர். இந்த நிலையில், கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளிகளான தாங்கப்பாண்டி என்கிற எழுமலை மற்றும் வெங்கடேசன் ஆகியோர் திருக்கோவிலூர் நீதித்துறை நடுவர் நீதி மன்றத்தில் ஆஜராகினர்.

Views: - 79

0

0