சுற்றுப்புறச் சூழலை பாதுகாக்க வலியுறுத்தி மலைப்பகுதிகளில் மிதிவண்டி பயணம்
Author: kavin kumar29 December 2021, 5:38 pm
கொடைக்கானல்: சுற்றுப்புறச் சூழலை பாதுகாக்க வலியுறுத்தி தமிழ்நாடு மிதிவண்டி சங்கம் சார்பாக கொடைக்கானல் மலைப்பகுதிகளில் 85 கிலோமீட்டர் மிதிவண்டி பயணம் சுற்றுலாத் துறையுடன் இணைந்து நடத்தப்பட்டது.
உலக வெப்பமயமாதல் மற்றும் மாசடைதல் போன்ற காரணங்களால் கடல் மட்டம் இன்னும் 30 ஆண்டுகளில் அதிக அளவு உயரும் வாய்ப்பு உள்ளதாக ஐ நா சபை சமீபத்தில் தெரிவித்துள்ளது. இந்த வெப்பமயமாதலை தவிர்க்க நச்சுக்காற்றை வெளியிடும் வாகன பெருக்கத்தை குறைக்க வலியுறுத்தியும், சுற்றுச்சூழலை பாதுகாக்க வலியுறுத்தியும் சூழல் சுற்றுலாவை நடை முறைப்படுத்த வலியுறுத்தியும் தமிழ்நாடு மிதிவண்டி சங்கம் சார்பாக நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் மிதிவண்டி பயணம் நடைபெற்று வருகிறது.
அதன் ஒரு பகுதியாக இன்று கொடைக்கானல் மலைப்பகுதிகளில் 85 கிலோமீட்டர் தொலைவு கொண்ட மிதிவண்டி பயணத்தை சங்க உறுப்பினர்கள் மற்றும் சுற்றுலாத் துறை இணைந்து நடத்தினர். தமிழ்நாடு தங்கும் விடுதியில் இருந்து துவங்கிய இந்த பயணமானது மேல்மலை பகுதிகளான பூம்பாறை, மன்னவனூர், கூக்கால், குண்டுபட்டி கிராமங்கள் வழியாக சுற்றி வந்து மீண்டும் தமிழ்நாடு விடுதியில் நிறைவடைந்தது. இந்த சுற்றுச்சூழல் மிதிவண்டி பயணத்தை கோட்டாட்சியர் முருகேசன் கொடியசைத்து துவக்கி வைத்தார். மலைப் பாதைகளில் பயணித்த இந்த மிதிவண்டி பயணத்தில் ஈடுபட்டவர்களுடன் சாலையில் சென்ற சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.
0
0