நோயாளிகள் மருத்துவமனைக்கு வர முன்வராத காரணத்தால் உயிரிழப்பு: மாவட்ட ஆட்சியர் பேட்டி

23 September 2020, 11:54 pm
Quick Share

புதுச்சேரி: புதுச்சேரியில் கொரோனா தொற்று அறிகுறிகள் இருந்தாலும் மருத்துவமனைக்கு வர முன்வராத காரணத்தால் உயிரிழப்புகள் ஏற்படுவதாக மாவட்ட ஆட்சியர் அருண் தெரிவித்துள்ளார்.

பருவமழை காலத்தில் டெங்கு, சிக்கன்குனியா, ஜப்பானிய மூளைக்காய்ச்சல், யானைக்கால் மற்றும் மலேரியா போன்ற நோய்களை கண்டறிதல் மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளுதல் தொடர்பான ஆய்வுக் கூட்டம் புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியரும், சுகாதாரத்துறை செயலருமான அருண் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் சுகாதாரத்துறை இயக்குநர் மோகன் குமார் உள்ளிட்ட சுகாதாரத்துறை, உள்ளாட்சித்துறை, கல்வித்துறை உள்ளிட்ட துறைகளை சேர்ந்த அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

கூட்டம் முடிந்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் அருண், புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், இன்று 5,642 நபர்களுக்கு பரிசோதனை மேற்கொண்டதில் 543பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர்,

கொரோனா தொற்று அறிகுறிகள் இருந்தாலும் மருத்துவமனை வர முன்வராத காரணத்தால் உயிரிழப்புகள் ஏற்படுவதாகவும் தெரிவித்தார். மேலும் கடந்த ஆண்டு 2ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் டெங்குவால் பாதிக்கப்பட்டதாகவும், இந்த ஆண்டு டெங்குவை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் நிலையில் ஹாட் ஸ்பாட்கள் கண்டறியப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

Views: - 9

0

0