அடிப்படை வசதிகள் செய்து தர கோரிக்கை: அரசு கல்லூரி முதல்வரை முற்றுகையிட்டு மாணவர்கள் போராட்டம்…

Author: Udhayakumar Raman
7 December 2021, 9:09 pm
Quick Share

கோவை: காரமடை அருகே அடிப்படை வசதிகள் செய்து தர கோரி அரசு கல்லூரி முதல்வரை முற்றுகையிட்டு மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை காரமடை அருகே குட்டையூர் மாதேஸ்வரன் மலை அடிவார பகுதியில் அரசு கலைக்கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் காரமடை, மேட்டுப்பாளையம், அன்னூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 1300க்கும் அதிகமான மாணவ, மாணவிகள் படித்து வருகிறார்கள்.இந்த கல்லூரிக்கு செல்வதற்கு காலையில் மட்டுமே 2 பஸ்கள் இயக்கப்படுகிறது. அந்த பஸ்களை தவறவிட்டால் பல கிலோ மீட்டர் தூரம் மாணவ, மாணவிகள் நடந்து செல்ல வேண்டிய நிலையே உள்ளது. இது தொடர்பாக பலமுறை அவர்கள் கோரிக்கை விடுத்து நடவடிக்கை எடுக்கவில்லை.இந்த நிலையில் போதிய பஸ்வசதிதான் இல்லை என்றால் கடந்த சில நாட்களாக கல்லூரி வளாகத்தில் மாணவர்கள் குடிப்பதற்கு தண்ணீர் கூட இல்லை. இதனால் மாணவர்கள் மிகவும் சிரமம் அடைந்து வருகிறார்கள்.

இந்த நிலையில் குடிநீர் வசதி மற்றும் பஸ்வசதி ஏற்படுத்தி தர கோரி கல்லூரியில் படிக்கும் மாணவ, மாணவிகள் இன்று காலை வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கல்லூரிக்கு வந்த கல்லூரி முதல்வரையும் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். எங்களுக்கு அடிப்பைட வசதிகள் உள்ளிட்டவற்றை நிறைவேற்றி தர வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.இதுகுறித்து மாணவர்கள் கூறுகையில், இந்த கல்லூரியில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் படித்து வருகிறோம். இந்த கல்லூரிக்கு என்று காலையில் மட்டுமே 2 பஸ்கள் இயக்கப்படுகிறது. மாலையில் அந்த பஸ்களும் இயக்கப்படுவதில்லை. இதனால் கல்லூரி முடிந்ததும் சுமார் 1 முதல் 2 கி.மீட்டர் தூரம் நடந்து மேட்டுப்பாளையம்- அன்னூர் சாலைக்கு வந்து பஸ் அல்லது ஆட்டோக்களில் ஏறி பயணிக்க வேண்டிய நிலை உள்ளது.

இது தொடர்பாக பலமுறை கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் நிர்வாகத்திடம் முறையிட்டும் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.பஸ் வசதி இல்லாததால் சரியான நேரத்தில் வகுப்புகளையும் கவனிக்க முடிவதில்லை. இதுதவிர கல்லூரியில் குடிப்பதற்கு தண்ணீர் வசதி இருந்தது. தற்போது அதுவும் இல்லை. இதனால் மாணவர்கள் அனைவருமே மிகவும் சிரமம் அடைந்துள்ளோம். எனவே பஸ் வசதி, குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அனைத்தையும் உடனடியாக நிறைவேற்றி தர வேண்டும் என்றனர்.போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுடன் கல்லூரி முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Views: - 83

0

0