மின்துறை பொறியாளர்கள் மற்றும் ஊழியர்கள் கருப்புகொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம்

14 September 2020, 7:36 pm
Quick Share

புதுச்சேரி: புதுச்சேரி மின்துறையை தனியார் மயமாக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மின்துறை பொறியாளர்கள் மற்றும் ஊழியர்கள் கருப்புகொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

யூனியன் பிரதேசங்களில் உள்ள மின்துறைகள் தனியார் மயமாக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. மத்திய அரசின் இந்த அறிவிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து புதுச்சேரி மின்துறையில் பணியாற்றும் ஊழியர்கள் பல கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக மத்திய அரசின் இந்த அறிவிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து புதுச்சேரி மின்துறை பொறியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் என 100க்கும் மேற்பட்டவர்கள் புதுச்சேரி மின்துறை தலைமை அலுவலகம் முன்பு கருப்புகொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மத்திய அரசை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர். மேலும் மத்திய அரசு தனியார் மயமாக்கும் முடிவை கைவிட வலியுறுத்தி அடுத்த கட்டமாக ஆளுநர் மாளிகை நோக்கி பேரணியாக சென்று மனு கொடுக்க உள்ளதாக போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்கள் தெரிவித்தனர்.